பக்கம் எண் :

கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும் 721

எனக்குத் தனியே ஜாகை திட்டம் செய்திருந்தார்கள். பல
வித்துவான்களை ஒருங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் அந்த மாதிரி ஏற்படுவது
மிகவும் அரிது. சிலப்பதிகாரம் முடிவு பெற்ற சந்தோஷத்தை வித்துவான்களும்
அன்பர்களும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டினார்கள். “நீங்கள்
கொடுத்திருக்கிற நூல் வரிசையைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறதே!
அடுத்தபடி என்ன ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“மணிமேகலை இருக்கிறது; புறநானூறு இருக்கிறது; பதிற்றுப் பத்து,
ஐங்குநூறு, அகநானூறு, நற்றிணை-இவைகளெல்லாம் இருக்கின்றன.
ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்” என்று சொன்னேன். இன்னதைத்
தொடங்குவதென்ற நிச்சயம் அப்பொழுது எனக்கு ஏற்படவில்லை.

சிறு வயல் ஜமீன்தாராகிய முத்து ராமலிங்கத் தேவருடனும்,
பாலவநத்தம் ஜமீன்தாரும் பொன்னுசாமித் தேவருடைய குமாரருமாகிய
பாண்டித்துரைத் தேவருடனும் நெருங்கிப் பழகிச் சல்லாபம் செய்யும்
சந்தர்ப்பம் எனக்கு அப்போது கிடைத்தது. முத்து ராமலிங்கத்தேவர் பாஸ்கர
சேதுபதிக்குப் பாட்டனார் முறையினர். மேலே நான் வெளியிடும் நூல்களுக்குப்
பொருளுதவி செய்வதாக அவர் வாக்களித்தார்.

அங்கே இருந்த பத்து நாட்களும் பொழுது போனதே தெரியவில்லை.
சேதுபதியினுடைய உபசாரமும் சாதுரிய வசனங்களும் கொடைப் பெருமையும்
எனக்கு வியப்பை உண்டாக்கின. அந்த விழாவுக்கு இரண்டு லக்ஷ
ரூபாய்களுக்கு மேல் செலவாயிற்றென்று தெரிந்தது.

வித்துவான்கள் சேதுபதியைப் பல படியாக வாழ்த்திப் பாடல்களைக்
கூறினர். நானும் சில செய்யுட்களைச் சொன்னேன்.

“விண்ணிற் சிறந்திடு பாற்கரர் போல் விரும்புமிந்த
மண்ணிற் சிறந்துயர் பாற்கர பூபதி வாழியவே”

[பாற்கரர் - பாஸ்கரன் (சூரியன்), பால் போன்ற கிரணத்தை யுடைய
சந்திரன்]

என்ற இரண்டடிகளே இப்போது நினைவுக்கு வருகின்றன.

சம்மானம்

நான் சேதுபதி வேந்தரிடம் விடைபெற்றுக் கொண்ட போது அவர்
எனக்கு இரண்டு உயர்ந்த சாதராக்களைப் போர்த்தி,