பக்கம் எண் :

722என் சரித்திரம்

“தஞ்சாவூர் ஜில்லாவிற்கு வருவேன். அப்போது அவகாசமாக
உங்களோடு பேசி உங்கள் தமிழ்ப் பணிக்கு வேண்டிய உதவியைச் செய்வேன்”
என்று சொன்னார். புறப்படும்போது தானாதிகாரி என் வழிச் செலவுக்கும் படிச்
செலவுக்குமாக ரூபா நூறு அளித்தார். நான் கும்பகோணம் வந்து என் தாய்
தந்தையருக்கும் அன்பர்களுக்கும் சாதராக்களைக் காண்பித்தேன். யாவரும்
மகிழ்ந்தனர். திருவாவடுதுறைக்குப் போய் அம்பலவாண தேசிகரிடம் காட்டிய
போது, “மிகவும் உயர்ந்த சம்மானம்; தங்கள் தகுதியை அறிந்து செய்த சிறப்பு
இது” என்று பாராட்டினார்.

“இந்த ஆதீன சம்பந்தம் இல்லாவிட்டால் எனக்கு என்ன மதிப்பு
இருக்கப் போகிறது?” என்று சொல்லி விட்டு, “இவை இரண்டும் என்ன
விலைபெறும்?” என்று கேட்டேன்.

“முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்” என்றார் அம்பலவாண தேசிகர்.

“இந்தந் துப்பட்டாவினால் எனக்கு என்ன பிரயோசனம்? இவற்றை
இங்கேயே கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன்.”

“என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்! ஒரு பெரிய சமஸ் தானத்தில்
பெற்ற மரியாதை; பத்திரமாக நீங்களே பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.”

“சிலப்பதிகாரம் அச்சிட்டதனால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது. அதைத்
தீர்க்க வழியில்லை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்
போகிறேன்? தமிழ்த்தாயின் திருப்பணியினால் வந்த கௌவரம் இவை.
ஆகையால் இவற்றை மீட்டும் அதற்கே உபயோகப் படுத்துவதுதான் நியாயம்”
என்றேன்.

அம்பலவாண தேசிகருக்கு, நான் அவற்றைக் கொடுத்து விடுவதில்
மனமிராவிட்டாலும் என் குறிப்பை அறிந்து மடத்திலேயே அவற்றை எடுத்துக்
கொண்டு அவற்றின் விலையாக ரூ. 300 எனக்கு அளிக்கச் செய்தார். நான்
அத்தொகையைப் பெற்றுச் சிலப்பதிகாரப் பதிப்பினால் அப்போது இருந்த
கடன் தொல்லையினின்றும் நீங்கினேன்.

கடன் தீர்ந்த சந்தோஷத்தில் தமிழ் நூற்பதிப்பைப் பற்றி
யோசிக்கலானேன். பல நூல்கள் என் கையில் இருந்தாலும் மணிமேகலையையும்
புறநானூற்றையும் அதிகமாக ஆராய்ந்து வந்தேன். அவ்விரண்டினுள்ளும்
புறநானூற்றில் பாதிக்கு மேல் பழைய உரை இருந்தது. மணிமேகலைக்கு
உரையில்லை. அன்றியும்