பக்கம் எண் :

புறநானூற்றுப் பதிப்பு 739

சேர்த்தேன். அரும்பத அகராதியில் பதமும் அதன் பொருளும்,
பிரயோகமும் அமைத்தேன். வி. வெங்கையரவர்களும், வி. கனக சபைப்பிள்ளை
அவர்களும் எழுதி அனுப்பிய குறிப்புக்களைப் புத்தகத்தின் இறுதியில்
இணைத்தேன்.

புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’
என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன்.
புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர்.
சேலம் இராமசுவாமி முதலியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் பார்த்து
இன்புறுவதற்கில்லையே என்ற வருத்தம் மாத்திரம் எனக்கு ஏற்பட்டது.

நண்பர் தூண்டுதல்

புத்தகம் வெளி வந்த பின்னர் எனக்குப் பல புதிய நண்பர்கள்
பழக்கமாயினர். பலர் இன்ன இன்ன நூலைப் பதிப்பித்து வெளியிட
வேண்டுமென்று அன்புடன் தூண்டலாயினர். தி. த. கனகசுந்தரம் பிள்ளை
மணிமேகலையையும், உதயணன் கதையையும் பதிப்பிக்க வேண்டுமென்று
எழுதினார். பொ. குமாரசுவாமி முதலியார் பதிற்றுப்பத்தையும்
அகநானூற்றையும் வெளியிட வேண்டுமென்றும் தக்க பொருளுதவி
செய்வதாகவும் தெரிவித்தார்.

நான் இந்நூல்களையும் வேறு சில நூல்களையும் ஆராய்ந்து
கொண்டுதான் வந்தேன். ஒரு நூலைப்பார்த்து வருகையில் சலிப்பு ஏற்பட்டால்
வேறு ஒன்றைப் பார்ப்பேன். ஒன்றற்குக் குறிப்பு எழுதும்போது தளர்ச்சி
உண்டானால் மற்றொன்றைப் படித்து இன்புறுவேன். இப்படி மாறி மாறி
நூல்களைப் பார்த்து வந்தமையால் பல நூல்கள் என் ஆராய்ச்சியில் இருந்து
வந்தன.

சொந்த வீடு

புறநானூறு நிறைவேறியவுடன் மேற்கொண்டு ஆராய்ச்சி வேலையை
நடத்தி வருவதற்குப் பின்னும் வசதியான வீடு இருந்தால் அனுகூலமாக
இருக்குமென்று நினைத்தேன். என் தந்தையார் ஏதேனும் ஒரு வீடு
சொந்தத்தில் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்தார். அவர் காலத்தில் அது
கைகூடவில்லை. போதிய பொருளின்மைதான் காரணம். இடவசதி அவசியம்
வேண்டியிருந்தமையின் இனிமேல் தாமதம் செய்யக்கூடாதென்றெண்ணிக்
கையிலிருந்த தொகையோடு ஒரு பகுதி கடனாகப் பெற்று ரூ. 3000 க்கு
ஸஹாஜி நாயகர் தெருவில் ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டை எனக்கு