பக்கம் எண் :

740என் சரித்திரம்

விற்றவர் சாமிநாதையரென்பவர். அவரிடம் அதை வாங்கியபோது
“இந்த வீடு உங்களிடம் இருந்தாலும் என்னிடம் இருந்தாலும் ஒன்றுதான்.
இரண்டு பேரும் ஒன்றே யல்லவா?” என்றேன்.

அந்த வீடு மூன்று கட்டும் மாடியும் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு
மிகவும் வசதியாக அமைந்திருந்தது. காவேரிக் கரையில் காலேஜு க்கு எதிரே
இருந்தமையால் காலேஜில் முதல் மணி அடித்த பிறகு கூடப் புறப்பட்டுப்
போய்ச் சேரும்படி இருந்தது. நல்ல நாளில் சொந்த வீட்டிற் குடி புகுந்து
தமிழாராய்ச்சியை நடத்தி வந்தேன்.

பாண்டித்துரைத் தேவர்

புறநானூற்றைப் பெற்றுக் கடிதமெழுதியவர்களுள் பாலவ நத்தம்
ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவரும் ஒருவர். அதில் அவர், “தங்களால்
லோகோபகாரமாய் அரிய நூல்கள் அச்சிடுவதாக எடுத்துக் கொள்ளப்பட்ட
நன்முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய எப்பொழுதும்
ஆவலுற்றிருப்பவனாதலின் அதற்குரிய நற்சமயம் அறிவிக்கக் கேட்டுக்
கொள்ளும் தங்கள் பாண்டித்துரை” (14-11-1894) என்று குறிப்பித்திருந்தார்.
இக்கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் திருவாவடுதுறையாதீன
கர்த்தரைத் தரிசிக்கும் பொருட்டுத் திருவிடைமருதூருக்கு வந்தார். ஆதீன
கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் அவர் வரவை எனக்குத் தெரிவித்து
என்னையும் வரும்படியாக எழுதினார். அவ்வாறே சென்று பாண்டித் துரையைச்
சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி
விட்டு “இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்!” என்று கேட்டார்.

“பல நூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலாமென்று
நினைத்தேன். ஆனால் இன்னும் அதிலுள்ள சில விஷயங்கள்
தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில்
இப்போது வழக்கில் இல்லாத பல நூற் செய்யுட்கள் உள்ளன. புறநானூற்றைப்
பதிப்பித்தபோது புறத் துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில்
புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோகமாயிற்று. அதனை நன்கு
ஆராய்ந்தேன். அதற்குக் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம்
மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்போது உரையுடன் வெளியிடலாமென்று எண்ணுகிறேன்” என்றேன் நான்.