பக்கம் எண் :

கண்ணன் காட்சியின் பலன் 91

பூரித்தியாகிவிடும். இதை ஒரு தடவை கேட்ட மாத்திரத்தில் நமக்குத்
திருப்தி யுண்டாகாது; பலமுறை கேட்க வேண்டும்” என்று ஆலோசித்தார்கள்.
’இவர்களை இந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்கும்படி செய்ய வேண்டும்’
என்று எண்ணி அதற்குரிய ஏற்பாட்டையும் செய்யத் தொடங்கினார்கள். பிறகு
சிதம்பரம் பிள்ளை முதலிய பன்னிரண்டு பேர்கள் மாதத்திற்கு ஒருவராக
ஐந்தைந்து ரூபாய் கொடுப்பதென்று தீர்மானித்து அந்த விஷயத்தை ஒரு பனை
ஓலையில் எழுதி அப்பன்னிருவரும் கையெழுத்திட்டார்கள். அதை என்
தந்தையாரிடம் கொடுத்து, “நாங்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டை
அங்கீகரித்துக் கொள்ளவேண்டும்” என்றார்கள். தந்தையார் ஏற்றுக்கொண்டு
நன்றியறிவு புலப்படும் வார்த்தைகளைக் கூறிப் பாராட்டினார்.

அது முதல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவர்கள் உதவி கிடைத்து
வந்தது. வேறு வகையில் கிடைத்த வரும்படிகளும் சேர்ந்தமையின் எங்கள்
வாழ்க்கை சுகமாக நடைபெறலாயிற்று.

இராமாயண பட்டாபிஷேகம் நடந்தபோது அவ்வூரினரும் பிறரும்
பொதுவில் இருபது வராகன் (70 ரூபாய்) சேர்த்துக் கொடுத்தார்கள்.
குன்னத்திலேயே சுப்பராய படையாட்சி என்ற செல்வர் ஒருவர் இருந்தார்.
சிலருடைய முயற்சியால் அவர் வீட்டிலும் இராமாயணப் பிரசங்கம்
நடைபெற்றது. பட்டாபிஷேக காலத்தில் அவரிடமிருந்து என் தகப்பனாருக்கு
இருபது வராகன் சம்மானம் கிடைத்தது. அவற்றைக் கொண்டு குடும்பக் கடனில்
ஒரு பகுதியைத் தீர்த்துக் கொள்ளலாமென்று எந்தையார் எண்ணினார்.

ஆபரணம் பெற்ற அன்னையார்

என் பாட்டனாரது சிராத்தம் நடத்த எங்களை அழைத்துக்கொண்டு என்
பிதா உத்தமதானபுரம் சென்றனர். தாம் கொணர்ந்திருந்த தொகையைக்
கொண்டு தாம் நினைத்தவாறே குடும்பக் கடனில் ஒரு பகுதியை அடைக்க
முயலும்போது பந்துக்களில் முதியவர்களாகிய சிலர் அவ்வாறு செய்வதைத்
தடுத்தார்கள்; “இப்போதுதான் நீ ஏதோ சம்பாதித்துக்கொண்டு வந்திருக்கிறாய்.
உன் மனைவிக்கு ஒரு நகை கூட இதுவரையிற் பண்ணிப் போடவில்லை.
முதலில் அவளுக்கு ஏதாவது தங்கத்தில் பண்ணிப் போடு. இவ்வளவு நாள்
இருந்த கடனுக்கு இப்போது என்ன அவசரம்? இனிமேல் நீ சம்பாதிக்கப்
போவதில்லையா? கடன் அடைபடாமலே நின்றுவிடப் போகிறதா? சரியான
காலத்தில்