பக்கம் எண் :

92என் சரித்திரம்

ஸ்திரீகளுக்கு நகை பண்ணிப் போட்டால்தானே அழகு? பிராயம் ஆன
பிறகு போட்டு என்ன பயன்? நகை பண்ணிப் போட்ட பிறகு மிகுந்ததைக்
கடனுக்குக் கொடு” என்று சொன்னார்கள்.

என் தாயாருக்கு அக்காலத்தில் திருமங்கலியம் ஒன்றுதான் தங்கத்தில்
இருந்தது. மற்றவை எல்லாம் பித்தளையே. என் தந்தையார் உறவினர்
கூறியதைக் கேட்டு அவ்வாறே அத்தொகையைக் கொண்டு காது ஓலை, குடைக்
கடுக்கன், பஞ்ச கலசவாளி ஆகியவற்றைத் தங்கத்தாற் செய்வித்து என்
தாயாருக்கு அணிவித்தார். என் தாயார் அவற்றை அணிந்து கொண்டபோது
அடைந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்ல முடியுமா? அரியிலூர்ப் பெருமாள்
கோவில் வாசலில் நடந்த தீபாராதனையை அவரும் மறக்கவில்லை. அவர்
காதிற் பொன்னகையும் முகத்திற் புன்னகையும் விளங்க நின்ற கோலம் என்
கண்முன் நிற்கிறது.

அத்தியாயம்-17

தருமம் வளர்த்த குன்னம்

உத்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என்
தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று
வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி
சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள்
கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 ரூபாய் (20
வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்
பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு
பழக்கமாகி விட்டது பாபநாசத்திற் பெற்ற தொகையைக் கொண்டு அவர்
இடையிடையே தாம் வாங்கிய கடன்களைத் தீர்த்து வந்தார்.

குன்னம் சென்றது

மறுபடியும் நாங்கள் குன்னம் சென்று இராமையங்கார் வீட்டில் இருந்து
வரலானோம். சிதம்பரம் பிள்ளை முதலிய செல்வர் பன்னிருவரும் தாங்கள்
எழுதிக் கொடுத்தபடி மாதந்தோறும் பத்து ரூபாய் வீதம் அளித்து வந்தனர்.
என் தந்தையாருக்கு வரவர என் விஷயத்திற் கவனம் அதிகமாயிற்று. குடும்பப்
பாதுகாப்பைப் பற்றிய கவலை குன்னத்தில் அவருக்குப் பெரும்பாலும்