பக்கம் எண் :

130சத்திய சோதனை

Untitled Document
கைவிட்டவர்களும் ஆவீர்கள்.    மேலும்,  இந்தியத் தலைப்பாகையே
உங்கள் தலைக்கு அழகாகவும் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத் தொப்பி
அணிந்து கொண்டால்,     உங்களை ஒரு ஹோட்டல் வேலைக்காரன்
என்றே     நினைத்து      விடுவார்கள்!” என்று அவர் சொன்னார்.

     அவர்    கூறிய    இப்புத்திமதியில்   அனுபவ    ஞானமும்,
தேசாபிமானமும்    அடங்கியிருந்ததோடு, ஒரு சிறிய குறுகிய புத்திப்
போக்கும் கலந்திருந்தது. அனுபவ ஞானம்     இருந்தது, தெளிவாகத்
தெரிந்த விசயம்.   தேசாபிமானம் இல்லாதிருந்தால்,  அவர் இந்தியத்
தலைப்பாகை அணிவதை   வற்புறுத்தியிருக்க மாட்டார்.  ஹோட்டல்
வேலைக்காரனைக்  கேவலப்படுத்தி அவர் கூறியது,  ஒரு வகையான
குறுகிய  புத்திப் போக்கையே          வெளிப்படுத்தியது. ஒப்பந்த
வேலையாட்களாக     வந்த இந்தியரில்  ஹிந்துக்கள்.  முஸ்லிம்கள்,
கிறிஸ்தவர்கள்      ஆகிய மூன்று வகுப்பார் இருக்கின்றனர். இதில்
கிறிஸ்தவர்கள்     என்போர்,   கிறிஸ்தவர்களாக  மதம் மாறிவிட்ட
ஒப்பந்தத்    தொழிலாளரின் சந்ததியினர்.  1893-இல் கூட இவர்கள்
தொகை அதிகமாகவே இருந்தது. இவர்கள், ஆங்கில உடைகளையே
அணிந்து வந்தனர்.  பெரும்பாலானவர்கள் ஹோட்டல் ஊழியர்களாக
வேலை செய்து பிழைத்து வந்தனர். ஆங்கிலத் தொப்பியைக் குறித்து
அப்துல்லா சேத்     குறை       கூறியது,  இந்த    வகுப்பினரை
மனத்திற்கொண்டேயாகும்.   ஹோட்டலில்   பணியாளராக இருப்பது,
இழிவான தொழில் என்று கருதப்பட்டது. இன்றும்கூட    அநேகரிடம்
இந்த எண்ணம் இருந்து வருகிறது.

     மொத்தத்தில்    அப்துல்லா சேத்தின்      புத்திமதி எனக்குப்
பிடித்திருந்தது.    தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்துப்
பத்திரிகைகளுக்கு   எழுதினேன்.  கோர்ட்டில்   நான் தலைப்பாகை
அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன்.   இவ்விஷயத்தைக்
குறித்துப்    பத்திரிக்கைகளில்      பலத்த விவாதம் நடைபெற்றது.
பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.
இவ்விதம்   நான்         தென்னாப்பிரிக்காவுக்கு       வந்த சில
தினங்களுக்குள்ளேயே    இச்சம்பவம்  எனக்கு       எதிர்பாராத
விளம்பரத்தை அளித்தது.     சிலர் என்னை ஆதரித்தனர் ; மற்றும்
சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்”    என்று கூறிப்
பலமாகக் கண்டித்தனர்.

     நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசி
வரையில்,   என் தலைப்பாகை              என்னிடம் இருந்தது
தென்னாப்பிரிக்காவில் நான் எப்பொழுது, ஏன், தலையில் எதையுமே
அணிவதை விட்டேன் என்பதைக் குறித்துப்    பிறகு கவனிப்போம்.