பக்கம் எண் :

135

Untitled Document
     என் கடமை என்ன என்பதைக்  குறித்துச்   சிந்திக்கலானேன்.
என்னுடைய    உரிமைகளுக்காக போராடுவதா,      இந்தியாவுக்குத்
திரும்பிவிடுவதா?        இல்லாவிடில்    அவமானங்களையெல்லாம்
பொருட்படுத்தாமல்       பிரிட்டோரியாவுக்குப் போய்,    வழக்கை
முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா?    என் கடமையை
நிறைவேற்றாமல்     இந்தியாவுக்கு       ஓடிவிடுவது     என்பது
கோழைத்தனமாகும்.  எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ;  நிறத்
துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி  மாத்திரமே அது.
சாத்தியமானால்,   இந்த நோயை         அடியோடு ஒழிக்க நான்
முயலவேண்டும் ;   அதைச் செய்வதில்   துன்பங்களை அனுபவிக்க
வேண்டும். நிறத்துவேஷத்தைப்  போக்குவதற்கு அவசியமான அளவு
மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

     எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது
என்று தீர்மானித்தேன்.

     மறுநாள் காலையில் ரெயில்வே ஜெனரல் மானேஜருக்கு நீண்ட
தந்தி ஒன்று கொடுத்தேன் ; அப்துல்லா சேத்துக்கும்  அறிவித்தேன்.
அவர் உடனே ஜெனரல்          மானேஜரைப் போய்ப் பார்த்தார்.
மானேஜரோ,     ‘ரெயில்வே அதிகாரிகள் செய்தது சரியே’ என்றார்.
ஆனால்,    நான் சேர வேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச்
சேரப் பார்க்குமாறு தாம்        ஸ்டேஷன் மாஸ்டருக்கு அறிவித்து
விட்டதாக     அப்துல்லா சேத்திடம் கூறினார்.  என்னைச் சந்தித்து,
எனக்கு வேண்டியதைச் செய்யுமாறு       மாரிட்ஸ்பர்க்கிலும் மற்ற
இடங்களிலும் இருந்த இந்திய வர்த்தகர்களுக்கு    அப்துல்லா சேத்
தந்திகள்   கொடுத்தார்.   வர்த்தகர்கள்        என்னைப் பார்க்க
ஸ்டேஷனுக்கு    வந்தார்கள்.   தாங்கள்      அனுபவித்திருக்கும்
கஷ்டங்களையெல்லாம்   சொன்னார்கள்.  எனக்கு நேர்ந்தது சர்வ
சாதாரணமான     அனுபவம் தான் என்று கூறி,  எனக்கு ஆறுதல்
அளிக்க முயன்றார்கள். முதல் வகுப்பிலும், இரண்டாம்  வகுப்பிலும்
பிரயாணம் செய்யும் இந்தியர்கள்,ரெயில்வே அதிகாரிகளிடமிருந்தும்
வெள்ளையரிடமிருந்தும் தொல்லையை     எதிர்பார்க்கவே நேரும்
என்றார்கள். இவ்விதம் துன்பக் கதைகளைக் கேட்பதிலேயே அன்று
பொழுது போயிற்று. மாலை   வண்டியும் வந்தது. எனக்காக ஏற்பாடு
செய்திருந்த இடம் அதில் இருந்தது. டர்பனில் நான் வாங்க  மறுத்த
படுக்கைச் சீட்டை மாரிட்ஷ்பர்க்கில் வாங்கிக்கொண்டேன். ரெயிலும்
என்னைச் சார்லஸ் டவுனுக்கு        கொண்டு போய்ச் சேர்த்தது.