பக்கம் எண் :

134சத்திய சோதனை

Untitled Document
பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.ஒரு
ரெயில்வே     சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று
கேட்டார்.  “வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர்
போய்விட்டார்.     ஆனால், ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை
மேலும் கீழுமாகப் பார்த்தார்.      நான்,  கறுப்பு மனிதன்’ என்பதை
அறிந்ததும்       அவருக்கு     ஆத்திரம் வந்துவிட்டது.  உடனே
போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார்.
அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு  அதிகாரி
என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக
வேண்டும்” என்றார்.

     “என்னிடம் முதல் வகுப்பு   டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.

     “அதைப்பற்றி அக்கறையில்லை ;  நீர் சாமான்கள் வண்டிக்குப்
போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.

     “நான் உமக்குச் சொல்லுகிறேன்.   இந்த வண்டியில் பிரயாணம்
செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே,   இதில்தான்
நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.

     “இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்
இறங்கிவிட வேண்டும்.     இல்லையானால்  உம்மைக் கீழே தள்ளப்
போலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.

     “அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து  இறங்க
மறுக்கிறேன்” என்று சொன்னேன்.

     போலீஸ்காரர் வந்தார்.    கையைப் பிடித்து இழுத்து என்னை
வெளியே தள்ளினார்.      என் சாமான்களையும் இறக்கிப் போட்டு
விட்டார்.சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன்.
ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது.   போட்ட இடத்திலேயே எனது
சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு,        கைப்பையை மாத்திரம்
என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள்     தங்கும் இடத்திற்குப்
போய் உட்கார்ந்தேன்.     சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்
இருந்தன.

     அப்பொழுது குளிர்காலம்.    தென்னாப்பிரிக்காவில் உயரமான
பகுதிகளில் குளிர்காலத்தில்      குளிர் மிகக் கடுமையாக இருக்கும்.
மாரிட்ஸ்பர்க்       உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர்
அதிகக்  கடுமையாக இருந்தது.      என் மேல்  அங்கியோ மற்றச்
சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்
கேட்க          நான் துணியவில்லை.   கேட்டால்,    திரும்பவும்
அவமதிக்கப்படுவேனோ    என்று பயந்தேன்.  எனவே,   குளிரில்
நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில்    விளக்கும்
இல்லை.       நடுநிசியில்   ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர்
என்னுடன் பேச        விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச
விரும்பும் நிலையில் நான் இல்லை.