பக்கம் எண் :

பிரிட்டோரியாவில் முதல் நாள் 145

Untitled Document
     இதையெல்லாம்       நான்   சொல்லக் கேட்டு   ஸ்ரீ பேக்கர்
சந்தோஷமடைந்தார். அவர் கூறியதாவது: “தென்னாப்பிரிக்கப் பொதுக்
கிறிஸ்தவ    பிரசார சபையில் நானும் ஒரு டைரக்டர்.  என் சொந்தச்
செலவில் ஒரு கிறிஸ்தவாலயம்   கட்டியிருக்கிறேன்; தவறாமல் அதில்
சமயப் பிரசங்கங்கள்   செய்து வருகிறேன். நிறத்துவேஷம்  என்பதே
என்னிடம் இல்லை.   எனக்குச் சக ஊழியர்    சிலர் இருக்கின்றனர்.
தினம் பகல் ஒரு மணிக்கு நாங்கள் சில நிமிஷநேரம் கூடி  சாந்தியும்
ஞான    ஒளியும் பெறுவதற்குப்    பிரார்த்தனை செய்து வருகிறோம்.
அதில் நீங்களும் கலந்துகொள்வீர்களாயின்  மகிழ்ச்சியடைவேன். என்
சக  ஊழியர்களையும்   உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
உங்களைச்        சந்திப்பதில்   அவர்கள்   ஆனந்தமடைவார்கள்;
அவர்களுடன் பழகுவதை   நீங்களும்        விரும்புவீர்கள்  என்று
தைரியமாகக் கூறுவேன். அதோடு நீங்கள் படிப்பதற்குச் சமய நூல்கள்
சிலவற்றையும் கொடுக்கிறேன். என்றாலும் நூல்களிலெல்லாம் தலையாய
நூல்     பைபிளேயாகையால்   முக்கியமாக நீங்கள் அதைப்  படிக்க
வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.”

     ஸ்ரீ பேக்கருக்கு    நன்றி கூறினேன்.  ஒரு மணிக்கு  நடக்கும்
பிரார்த்தனைக்குச்    சாத்தியமானவரை    ஒழுங்காக வருவதாகவும்
ஒப்புக்கொண்டேன்.

     “அப்படியானால், நாளை, பகல் ஒரு மணிக்கு உங்களை இங்கே
எதிர்பார்க்கிறேன்.   பிரார்த்தனைக்கு  நாம்     இருவருமே சேர்ந்து
போவோம்” என்றார். பிறகு     விடை பெற்றுக் கொண்டு பிரிந்தோம்.

     இந்தப் பேச்சைப்பற்றித் திரும்பச்   சிந்தித்துப் பார்க்க எனக்கு
அப்பொழுது அவகாசம் இல்லை. ஸ்ரீ ஜான்ஸ்டனின்  ஹோட்டலுக்குச்
சென்றேன்.   அவருக்குக்    கொடுக்க        வேண்டியிருந்ததைக்
கொடுத்துவிட்டு, வசிப்பதற்குப்  புதிதாக அமர்த்தியிருந்த இடத்திற்குச்
சென்று, அங்கேயே என் மத்தியான   ஆகாரத்தையும் சாப்பிட்டேன்.
அவ் வீட்டு அம்மாள்    நல்ல பெண்மணி.  எனக்காக அவர்  சைவ
உணவு சமைத்திருந்தார்.    வெகு சீக்கிரத்திலேயே அக் குடும்பத்தில்
நானும் ஒருவன் ஆகிவிட்டேன்.

     தாதா அப்துல்லா  ஒரு நண்பருக்குக் கடிதம்  கொடுத்திருந்தார்.
அடுத்தபடியாக              அவரைப் பார்க்கச் சென்றேன். தென்
ஆப்பிரிக்காவில்    இந்தியருக்கு இருந்த    கஷ்டங்களைக் குறித்து,
இன்னும்     அதிகமான      விவரங்களை        அவரிடமிருந்து
தெரிந்துகொண்டேன்.      தம்முடனேயே தங்கும்படி அவர் என்னை
வற்புறுத்தினார். இதற்காக  அவருக்கு நன்றி கூறிவிட்டுத் தங்குவதற்கு
வேறு ஏற்பாடுகளைச்       செய்துவிட்டதாகச் சொன்னேன். எனக்கு
ஏதாவது    தேவை இருந்தால்  அதைக் கேட்கத் தயங்க வேண்டாம்
என்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார்.