பக்கம் எண் :

144சத்திய சோதனை

Untitled Document
சிக்கலானதும் கூட அவசியமான    தகவல்களைப் பெறும் அளவுக்கு
மாத்திரம்   உங்கள் உதவியை  ஏற்றுக்கொள்ளுகிறேன்.  என்னுடைய
கட்சிக்காரரிடமிருந்து    வேண்டிய   விவரங்களையெல்லாம் உங்கள்
மூலமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமாகையால் அவருடன் நான்
வைத்துக்  கொள்ள        வேண்டிய          தொடர்பை நீங்கள்
எளிதாக்கிவிட்டீர்கள்.  இது        நிச்சயமாக வசதியானதே. நீங்கள்
தங்குவதற்கு நான் இன்னும் இடம் பார்க்கவில்லை. உங்களைப் பார்த்த
பிறகு ஏற்பாடு     செய்வது நல்லது என்று இருந்துவிட்டேன். இங்கே
பயப்படக்கூடிய   வகையில்     நிறத்துவேஷம்   இருந்து வருகிறது.
ஆகையால்,    உங்களைப் போன்றவர்கள்      தங்குவதற்கு  இடம்
பார்ப்பதென்பது     சுலபமல்ல. ஆனால்,  எனக்கு     ஓர் ஏழைப்
பெண்ணைத் தெரியும். அவள் ஒரு ரொட்டிக்கடைக்காரரின்  மனைவி.
அம்மாது உங்களுக்கு இடம் கொடுப்பாள்     என்று நினைக்கிறேன்.
அதனால்    அவளுக்கும்    வருவாய் இருக்கும். வாருங்கள், அவள்
இருக்கும் இடத்திற்குப் போவோம்.

     அப் பெண்மணியின் வீட்டிற்கு என்னை    அவர் அழைத்துச்
சென்றார். என்னைக்   குறித்து தனியாக       அவரிடம் பேசினார்.
வாரத்திற்கு 35 ஷில்லிங் கொடுத்துச்     சாப்பிட்டுக் கொண்டு, நான்
அங்கே தங்குவதற்கு அப்பெண் சம்மதித்தார்.

     ஸ்ரீ பேக்கர்,   அட்டர்னித் தொழில்   செய்து வந்ததோடு மத
சம்பந்தமான      பிரசங்கங்களும் செய்து வந்தார்.  அவர் இன்னும்
உயிருடன் இருக்கிறார். இப்போது    சட்டத் தொழிலை விட்டு விட்டு
மதப்பிரசாரம் மட்டும்     செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல
சொத்து உண்டு.  இப்பொழுதும்  எனக்குக் கடிதங்கள்   எழுதுகிறார்.
எழுதும் கடிதங்களிலெல்லாம் ஒரே விஷயத்தையே  எழுதிக்கொண்டு
வருகிறார். எந்த வகையில் கவனித்தாலும்   கிறிஸ்தவ சமயம் ஒன்றே
எல்லாவற்றிலும்   சிறந்தது   என்கிறார். ஏசுநாதர்     ஒருவரையோ
கடவுளின்    திருக்குமாரர்,    அவரே மனித வர்க்கத்தின் ரட்ஷகர்
என்பதை     ஒப்புக்கொள்ளாத வரையில்   நிரந்தரமான சாந்தியை
அடையவே முடியாது என்று வாதிக்கிறார்.

     ஸ்ரீ பேக்கரை நான்   முதல் முறை  சந்தித்துப் பேசியபோதே,
மத சம்பந்தமான   என்னுடைய        கருத்துக்களைப்பற்றி அவர்
விசாரித்தார்.   நான் அவருக்கு      பின்வருமாறு    சொன்னேன்:
“பிறவியினால் நான் ஹிந்து என்றாலும்     ஹிந்து தருமத்தைப்பற்றி
எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியாது. மற்ற மதங்களைக் குறித்துத்
தெரிந்திருப்பதோ     அதைவிடவும்     குறைவு. உண்மையில், மத
சம்பந்தமாக என் நிலை என்ன?  என் நம்பிக்கை  எதுவாக இருக்க
வேண்டும்? என்பதையே நான் அறிவேன். என்   சொந்த மதத்தைக்
குறித்துக் கவனமாகப் படிக்க விரும்புகிறேன். முடிந்த  வரையில் பிற
சமயங்களைக் குறித்தும் படிக்க எண்ணுகிறேன்.”