Untitled Document இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்து யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கு இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.
ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்ததாயினும், பர்ஸிய மொழிக்கும் அரபு மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று நான் கருதுவதில்லை. ஏனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய, அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப் படிப்பது அவசியம்.
உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே; அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை.மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னைக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது.சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.
இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது | |
|
|