பக்கம் எண் :

217

Untitled Document
புனாத் தலைவர்கள் குழாத்தினர்,   எந்தவிதப் படாடோபமும் இன்றி,
ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு  இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள்.
நான்      பெரும் மகிழ்ச்சியும்,     என் வேலையில் மேலும் அதிக
நம்பிக்கையும்    கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும்
வைத்தார்கள்.

     அடுத்தபடியாக நான்      சென்னைக்குச் சென்றேன். அங்கே
மக்கள் மட்டற்ற உற்சாகம்    கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய
சம்பவம், பொதுக்கூட்டத்தில்        எல்லோருடைய உள்ளத்தையும்
உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப்பட்டிருந்தது. எனக்கு  அது
ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில்   இருந்தவர்கள்
ஒவ்வொரு சொல்லையும்        கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின்
முடிவில்,        பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி. சில
மாற்றங்களுடன்  இரண்டாம் பதிப்பில் 10,000 பிரதிகள் அச்சிட்டேன்.
அவை ஏராளமாக விற்பனையாயின.         என்றாலும், அவ்வளவு
அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க      வேண்டியதில்லை என்று
எண்ணினேன். என் உற்சாகத்தில்,        இருக்கக்கூடிய தேவையை
அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன்.      நான் பிரசங்கம் செய்தது,
பொது ஜனங்களில் ஆங்கிலம்   தெரிந்தவர்களுக்கே.  சென்னையில்
அந்த வகுப்பினர் இவ்வளவு     பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.

     சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக   உதவி செய்தவர்,
‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையின் ஆசிரியரான  காலஞ் சென்ற
ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன்       பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர்
கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி   தமது காரியாலயத்திற்கு என்னை
அழைத்து, வேண்டிய           யோசனைகளைக் கூறினார். ‘ஹிந்து’
பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும்,    டாக்டர் சுப்பிரமணியமும்
அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ. ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது
‘மதராஸ்     ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம்
தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார்.       அந்த வாய்ப்பை நானும்
தாராளமாகப்           பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம்,
பச்சையப்பன் மண்டபத்தில்     டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில்
நடந்தது என்றே எனக்கு ஞாபகம்.

     நான்     சந்தித்தவர்களிடமெல்லாம்   ஆங்கிலத்திலேயே பேச
வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத்
தோன்றவில்லை. நான்     சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது
அன்பைப் பொழிந்தார்கள்.       நான் கொண்டிருந்த லட்சியத்திலும்
அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர்.      அன்பினால் தகர்த்துவிட
முடியாத தடையும் உண்டா?