பக்கம் எண் :

228சத்திய சோதனை

Untitled Document
ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.

     நேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த   நாகரிகத்தின் கனிகளோ,
எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ
அந்த   நாகரிகத்திற்காக      நான் வருந்தினேன்.   அந்த நாகரிகம்
எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது.      ஆகவே, அச்சிறு
கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த     நாகரிகத்தைப் பற்றிய என்
கருத்தை       எடுத்துக் கூறினேன்.   காப்டனும் மற்ற நண்பர்களும்
பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன்  நான் பேசினேனோ
அதே             உணர்ச்சியுடன்    என் பிரசங்கத்தை அவர்கள்
ஏற்றுக்கொண்டனர். அவர்கள்   வாழ்க்கையின் போக்கை  அப்பேச்சு
எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால்,
அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற  அதிகாரிகளோடும் மோனட்டு
நாகரிகத்தைக் குறித்து, நீண்டநேரம் நான் பேசிக்   கொண்டிருந்தேன்.
கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல்     மேற்கத்திய நாகரிகம்
முக்கியமாக பலாத் காரத்தையே   அடிப்படையாகக் கொண்டிருக்கிறது
என்று என்    பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே
நிறைவேற்ற முடியுமா என்று சிலர்    கேள்வி கேட்டனர். அவர்களில்
ஒருவர் காப்டன் என்பது எனக்கு   ஞாபகம். அவர் என்னை நோக்கி
“வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று
வைத்துக்கொள்ளுவோம். அப்பொழுது      உங்களுடைய அகிம்சைக்
கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்?“ என்று கேட்டார். அதற்கு
நான் பின்வருமாறு பதில் சொன்னேன்:       “அவர்களை மன்னித்து,
அவர்கள் மீது       வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும்
நற்புத்தியையும்      கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன்.
அவர்கள் மீது           எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய
அறியாமைக்கும் குறுகிய      புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன்.
தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று
அவர்கள்       உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன்.
ஆகையால், அவர்கள் மீது நான்     கோபம் கொள்ளுவதற்கு எந்தக்
காரணமும் இல்லை”.

     கேள்வி கேட்டவர் சிரித்தார். ஒரு வேளை   நான் சொன்னதில்
நம்பிக்கை ஏற்படாமல் அவர் சிரித்திருக்கலாம்.

     இப்படியாக நாட்கள் ஆயாசத்தை    உண்டுபண்ணிய வண்ணம்
நீண்டுகொண்டே இருந்தன. இப்படிக்        கப்பல் ஒதுக்கி வைக்கப்
பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது      நிச்சயம் இல்லாமல்
இருந்தது. இப்படிக்      கப்பலை நிறுத்தி வைக்க      உத்தரவிட்ட
அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது   என்றும்,
அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே         கப்பலில் இருந்து இறங்க
எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார்.