பக்கம் எண் :

சோதனை231

Untitled Document
நாங்கள் போகும்   வழியில் இருந்தது.  நாங்கள் அங்கே போனதும்,
ஸ்டேஷனிலேயே பத்திரமாகத் தங்கிவிடுமாறு சூப்பரிண்டெண்டென்டு
கூறினார். அவர் யோசனைக்கு நன்றி கூறினேன். ஆனால்,  அங்கே
தங்க மறுத்துவிட்டேன். “தங்கள் பிழையை உணரும்போது அவர்கள்
சாந்தம் அடைந்துவிடுவது நிச்சயம். அவர்களுக்கு   நியாய புத்தியும்
இருக்கும் என்ற நம்பிக்கை     எனக்கு உண்டு” என்றேன். பின்னர்,
போலீஸ் பாதுகாப்புடன்,மேற்கொண்டு எவ்விதத் துன்பமும் இல்லாமல்
ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை அடைந்தேன்.     உடம்பெல்லாம் இசிவு,
ஊமைக்காயம்      ஓர் இடத்தில் மாத்திரம் தோல் பெயர்ந்து காயம்
ஏற்பட்டிருந்தது. அங்கே இருந்த         கப்பலின் டாக்டர் தம்மால்
சாத்தியமான எல்லா உதவிகளையும் செய்தார்.

     வீட்டிற்குள் அமைதியாக இருந்தது;     ஆனால், வெளியிலோ
வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து.
‘காந்தியை வெளியே அனுப்பு!’     என்று   அந்த ஆவேசக்கூட்டம்
கூச்சல்    போட்டுக் கொண்டிருந்தது.        நிலைமையை உடனே
அறிந்துகொண்ட   போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு,  கூட்டம் கட்டுக்
கடங்காது     போய்விடாதபடி       ஏற்கனவே வந்து சமாளித்துக்
கொண்டிருந்தார். கூட்டத்தை    அவர் விரட்டவில்லை. அவர்களிடம்
தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும்,   நிலைமை அவரும்
கவலைப் பட வேண்டியதாகவே இருந்தது.    பின்வருமாறு எனக்குச்
செய்தி    அனுப்பினார்:   “உங்கள்         நண்பரின் வீட்டையும்
சொத்துக்களையும்      உங்கள்  குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க
விரும்பினால்,     என்  யோசனைப்படி   மாறுவேடத்துடன் நீங்கள்
வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.”

     இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று   மாறுபட்ட இரு
நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து
நேரலாம் என்று கற்பனையில்       மாத்திரமே பயந்த ஸ்ரீ லாப்டன்,
என்னைப்     பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார்.
அந்த      யோசனையை      ஏற்று நடந்தேன்.   ஆபத்து முற்றும்
உண்மையாகவே       இருந்த சமயத்தில், மற்றொரு நண்பர் அதற்கு
நேர்மாறான யோசனையைக் கூறினார்.    அதையும் ஏற்று நடந்தேன்.
என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால்  அப்படிச் செய்தேனா,
அல்லது என் நண்பரின் உயிருக்கும்     சொத்துக்கும் என் மனைவி
மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக
அப்படிச் செய்தேனா   என்பதை யார் கூற முடியும்? மேலே கூறியது
போல், முதலில், கூட்டத்தை நான் தைரியமாக      எதிர்த்து நின்றது,
பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான்
செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும்?