பக்கம் எண் :

240சத்திய சோதனை

Untitled Document
காலம் நடத்திக்கொண்டிருந்த வசதிக் குறைவான  பள்ளிக்கூடங்களில்
இவர்கள் சிறிது காலம் ஒழுங்காகப் படித்து வந்தனர்.

     இந்தப் பரிசோதனைகளெல்லாம் அரைகுறையானவைகளே. நான்
விரும்பிய அளவு, குழந்தைகளுக்காக      என் நேரத்தைச் செலவிட
என்னால் முடியவில்லை. அவர்கள்     விஷயத்தில் போதிய கவனம்
செலுத்த என்னால் முடியாது போனதும்,      தவிர்க்கமுடியாத வேறு
காரணங்களும், அவர்களுக்கு    நான் அளிக்க விரும்பிய இலக்கியக்
கல்வியை     அளிக்க முடியாதபடி செய்துவிட்டன.  இவ்விஷயத்தில்
என்மீது என் குமாரர்கள் குறைகூறியிருக்கின்றனர். எம். ஏ.   அல்லது
பி. ஏ. படித்தவரையோ           அல்லது    மெட்ரிகுலேஷனாவது
படித்தவர்களையோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம், பள்ளிக்கூடப்
படிப்பு இல்லாததன்            கஷ்டத்தை அவர்கள் உணருவதாகத்
தோன்றுகிறது.

     அது எப்படியானாலும் என் அபிப்பிராயம் வேறு. எப்படியாவது
அவர்களைப்            பொதுப்  பள்ளிக்கூடத்தில் பிடிவாதமாகப்
படிக்கவைத்திருந்தேனாயின், அனுபவம்      என்ற பள்ளிக்கூடத்தில்
மாத்திரம்        கிடைக்கக்கூடியதான,   பெற்றோருடன் இருப்பதால்
அடைவதான        கல்வி,   அவர்களுக்கு இல்லாது போயிருக்கும்.
அவர்களைப்பற்றி       நான் இன்று கொஞ்சமும் கவலை இல்லாமல்
இருக்கிறேன்;   இப்படி          இருக்கமுடியாமலும்  போயிருக்கும்.
என்னைவிட்டுப்பிரிந்து, இங்கிலாந்திலோ,     தென்னாப்பிரிக்காவிலோ
அவர்கள்         பெற்றிருக்கக்கடிய இயற்கையல்லாத கல்வி, இன்று
வாழ்க்கையில்       அவர்கள் காட்டி வரும் எளிமையையும், சேவா
உணர்ச்சியையும்         அவர்களுக்குப் போதித்தே இராது. மேலும்,
அவர்களுடைய          செயற்கை வாழ்க்கை முறை எனது பொது
வேலைக்குப் பெரிய இடையூறாகவும்     இருந்திருக்கும். ஆகையால்,
என் திருப்திக்கு     ஏற்ற வகையிலோ,   அவர்கள் திருப்தியடையும்
வகையிலோ, அவர்களுக்கு இலக்கியக் கல்வியை  அளிக்க என்னால்
முடியாது போயிற்று. ஆனாலும்,       என்னுடைய சக்திக்கு எட்டிய
மட்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய     என் கடமையை நான்
செய்யாமல்          இருந்துவிடவில்லை என்று, என்னுடைய கடந்த
ஆண்டுகளைத் திரும்ப எண்ணிப் பார்க்கும்போது  நான் நிச்சயமாகக்
கருதுகிறேன். பொதுப்        பள்ளிக் கூடங்களுக்குக் குழந்தைகளை
அனுப்பாது போனோமே என்று நான் வருந்தவே இல்லை. இன்று என்
மூத்த மகனிடம்      விரும்பத்தகாத குணங்களை நான் காண்கிறேன்.
கட்டுத் திட்டமும் ஒழுங்கும் அற்ற என்    இளவயதின் எதிரொலியே
அது     என்று நான் எப்பொழுதும் உணருகிறேன். என் வாழ்நாளின்
அப்பகுதி, அரைகுறையான அறிவும், சுகபோகப் பற்றும் நிரம்பியிருந்த
காலம் என்று கருதுகிறேன். அந்த     காலமும் என் மூத்த மகனுக்கு
நன்றாகப்     புத்தி           தெரிந்த காலமும் ஒன்றாக இருந்தன.