பக்கம் எண் :

246சத்திய சோதனை

Untitled Document
நட்பே இதில்    முக்கியமான அம்சமாக இருந்திருக்கக்கூடும் என்பது
என் ஞாபகம். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன்,  தமது கணவரிடம் வைத்திருந்த
அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திரபாயிடம்
சொல்லிக் கொண்டிருந்தேன்.       ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக்
கூட்டத்தில் இருக்கும்போது கூட,    அவருக்குத் தம் கையினாலேயே
தேயிலைப் பானம்     தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர்
மனைவி வற்புறுத்தி வந்தார்    என்று நான் எங்கோ படித்திருந்தேன்.
புகழ்பெற்ற இத் தம்பதிகளின்    ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில்
இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம்.       இதைக் கவிஞரிடம் நான்
கூறியதோடு, சாதாரணமாக   சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும்
புகழ்ந்து பேசினேன்.      அதன் பேரில் ராய்ச்சந்திரபாய் என்னைப்
பின்வருமாறு கேட்டார்: ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன்,       மனைவி என்ற
முறையில் தம்           கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ
கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு     எதுவானாலும் அதைப்
பற்றிய சிந்தனையின்றி      ஸ்ரீமதி       கிளாட்ஸ்டன் அவருக்குப்
பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப்
பெரிது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய
சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ  வைத்துக் கொள்ளுவோம்.
இதே கவனிப்போடு அப்போதும்           தொண்டு செய்திருந்தால்
அப்பொழுது நீங்கள் அந்தச்  சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்?
இத்தகைய  அன்புள்ள  சகோதரிகளையும்   வேலைக்காரர்களையும்
பற்றி    நாம் கேள்விப்பட்டதில்லையா?   அதே    அன்பு நிறைந்த
பக்தியை    ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுவோம். அப்பொழுது    ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில்
திருப்தியடைவதைப் போல்       திருப்தியடைவீர்களா? நான் கூறிய
இக் கருத்தைக்கொண்டு, விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

     ராய்ச்சந்திரபாயும் விவாகம் ஆனவரே.      அவர் கூறியவை,
கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின
என்பது என் நினைவு. ஆனால், அவர்  கூறியவை என் உள்ளத்தில்
மிகவும் ஆழப்பதிந்துவிட்டன.     கணவனிடம் மனைவி கொள்ளும்
பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி,   ஆயிரம் மடங்கு
போற்றற்கு உரியது       என்று நான் எண்ணினேன். கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே        பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது.
ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி  கொள்ளுவதில் ஆச்சரியம்
எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால்,
எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான
ஒரு   பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது.
கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள மெள்ள விளங்கலாயிற்று.