பக்கம் எண் :

பிரம்மச்சரியம் - 1 247

Untitled Document
     அப்படியானால், எனக்கும்        என் மனைவிக்கும் இடையே
இருக்கும் உறவு, எப்படி இருக்கவேண்டும்?’ இவ்வாறு என்னை நானே
கேட்டுக்கொண்டேன். அவளிடம்   உண்மையோடு நடந்துகொள்ளுவது
என்பதில், என்னுடைய காம இச்சைக்கு     அவளைக் கருவியாக்கிக்
கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா?    காம இச்சைக்கு நான்
அடிமையாக இருக்கும் வரையில், மனைவியிடம்   நான் உண்மையான
அன்போடு இருக்கிறேன்          என்பதற்கு மதிப்பே இல்லை. என்
மனைவியைப் பொறுத்தவரை, நேர்மையாகச்   சொல்லுவதானால், காம
இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை
என்றே      கூறவேண்டும். ஆகையால்,   எனக்குத் திடமான உறுதி
மாத்திரம்  இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு
மிக எளிதான காரியம். எனக்கு   மன உறுதி இல்லாததுதான் அல்லது
காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.

     இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி  விழிப்படைந்து விட்டபிறகும்
கூட,         இரு தடவைகளில்  நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத்
தூண்டுதலாக       இருந்த நோக்கம்,      உயர்வானதாக இல்லாது
போனதனாலேயே நான் தவறினேன்.மேற்கொண்டு    குழந்தைகளைப்
பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக
இருந்தது.      இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை
முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய
அத்தியாயத்தில் டாக்டர்  அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரச்சாரத்தை
குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால்  என் மனம்
செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில்     சிறிதளவு சென்றிருந்தாலும்,
அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை
உடனே மாற்றி விட்டது.      ‘வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள்
முயற்சியே, அதாவது புலன்       அடக்கமே சிறந்தது’ என்று அவர்
கூறியது,      என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு,  நாளாவட்டத்தில்
மனத்தை ஆட்கொண்டும் விட்டது.      ஆகையால், மேற்கொண்டும்
குழந்தைகள் வேண்டும் என்ற    ஆசை எனக்கு இல்லை என்பதைக்
கண்டதும், புலனடக்கத்திற்கான    முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித்
தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம்.    நாளெல்லாம் நன்றாக
உழைத்துக் களைத்துப் போன பிறகே  படுக்கைக்குப் போவது என்று
தீர்மானித்தேன்.  இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன் தரவில்லை.
ஆனால், வெற்றி பெறாதுபோன இத்தகைய எல்லா     முயற்சிகளின்
ஒருமித்த பயனே, முடிவான        தீர்மானமாக உருவாகியது என்று,
அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது   எண்ணிப் பார்க்கும்போது
உணருகிறேன்.