பக்கம் எண் :

248சத்திய சோதனை

Untitled Document
     இப்படியே காலம் கடந்து வந்து,    1906, ஆம் ஆண்டில்தான்
இறுதியான  தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம்
அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை.     அப்போராட்டம் வரும்
என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை.  போயர் யுத்தத்தைத்
தொடர்ந்து, நேட்டால்,         ‘ஜூலுக் கலகம்’ ஆரம்பம் ஆயிற்று.
அப்பொழுதுநான் ஜோகன்னஸ் பர்க்கில்    வக்கீல் தொழில் நடத்திக்
கொண்டிருந்தேன்.       அச்சமயம்     எனது சேவையைத் தேசிய
சர்க்காருக்கு அளிக்க  வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை
ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில்
கவனிப்போம். ஆனால், அவ்வேலை, புலன்      அடக்கத் துறையில்
என்னை       வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல
இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து  ஆலோசித்தேன்.
பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும்    குழந்தை வளர்ப்பும்
பொது          ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு
உறுதியாகப்பட்டது.        கலகத்தின்போது   சேவை செய்வதற்குச்
சௌகரியமாக இருப்பதற்காக        ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என்
குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான்
ஒப்புக்கொண்ட         ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு
வேண்டிய வசதிகளையெல்லாம்   நான் செய்து வைத்திருந்த வீட்டை
காலி     செய்துவிட வேண்டி வந்தது.         என் மனைவியையும்
குழந்தைகளையும் போனிக்ஸூக்குக்     கொண்டுபோய் விட்டுவிட்டு,
நேட்டால் படையுடன்     சேர்க்கப்பட்டிருந்த    இந்திய வைத்தியப்
படைக்குத்       தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன்
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அணி வகுத்துச் செல்ல நேர்ந்த
அச் சமயத்தில்தான், முடிவான எண்ணம் என் மனத்தில் பளிச்சென்று
உதயமாயிற்று. அதாவது,     சமூகத்தின் சேவைக்கே என்னை இந்த
வகையில் அர்ப்பணம்     செய்து கொள்ள விரும்பினால், பிள்ளைப்
பேற்றில்   அவாவையும் பொருள் ஆசையும் அறவே ஒழித்துவிட்டுக்
குடும்பக்     கவலையினின்றும்        நீங்கியதான வானப் பிரஸ்த
வாழ்க்கையை  நான்     மேற்கொள்ளவேண்டும் என்ற   எண்ணம்
உதயமாயிற்று.

     அக் ‘கலகம்’ சம்பந்தமாக எனக்கு ஆறு வார காலமே வேலை
இருந்தது. ஆனால், இந்தக் குறுகிய காலம்,  என் வாழ்க்கையில் மிக
முக்கியமானதாயிற்று.        விரதங்களின்   முக்கியத்துவம், முன்பு
இருந்ததைவிட எனக்கு இன்னும்     அதிகத் தெளிவாக விளங்கியது.
ஒரு விரதம், உண்மையான         சுதந்திரத்தின் கதவை அடைத்து
விடுவதற்குப்     பதிலாக அக் கதவைத் திறந்து விடுகிறது என்பதை
உணர்ந்தேன். போதிய   அளவு உறுதி என்னிடம் இதற்கு முன்னால்
இல்லை; என்னிடத்திலேயே எனக்கு நம்பிக்கை   இல்லை. கடவுளின்
அருளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.   என் மனம், சந்தேகமாகிய