பக்கம் எண் :

கோகலேயுடன் ஒரு மாதம் - 1281

Untitled Document
ஏற்றுக்கொண்டுவிடுவார்களாம். தமது        குருவின் உள்ளத்திலும்
அறிவிலும் இருந்த இந்த அபூர்வ     குணாதிசயங்களை விவரித்துக்
கூறும்போது கோகலேக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

     அந்த நாளில் கோகலே ஒரு   குதிரை வண்டி வைத்திருந்தார்.
குதிரை வண்டி அவருக்கு என்ன   காரணத்தினால் அவசியமாயிற்று
என்பது எனக்குத் தெரியாது. ஆகவே,     இதைக்குறித்து அவரிடம்
வாதாடினேன். “தாங்கள் டிராம்     வண்டியில் போய் வரக்கூடாதா?
அப்படிப் போய் வந்தால்,        தலைவர் கௌரவத்திற்கு இழுக்கு
ஏற்பட்டுவிடுமா?” என்றேன்.

     இக்கேள்வி அவருக்குக் கொஞ்சம்        மனவருத்தத்தையே
உண்டாக்கிவிட்டது. அவர் கூறியதாவது: “அப்படியானால்   நீங்களும்
என்னை அறிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள்! கவுன்ஸில் அங்கத்தினர்
என்பதற்காக எனக்குக் கிடைக்கும் படிப்பணத்தை    நான் சொந்தச்
சௌகரியத்திற்காக உபயோகித்துக்     வர முடியவில்லையே அன்று
வருத்தப்படுகிறேன். என்னைப் போல்     நீங்களும் எல்லோருக்கும்
தெரிந்திருக்கும் வகையில்            விளம்பரத்தைப் பெற்றுவிடும்
துர்பாக்கியத்தை அடைந்துவிடும் போது, டிராம் வண்டிகளில் நீங்கள்
போய் வருவது         அசாத்தியம்       என்று ஆகாவிட்டாலும்
கஷ்டமானதாகவே இருக்கும். தலைவர்கள்   செய்வதெல்லாம் தங்கள்
சொந்தச்  சௌகரியத்திற்காகவே என்று         ஊகித்துக்கொண்டு
விடுவதற்கு   எவ்விதமான காரணமும் இல்லை. உங்களுடைய எளிய
பழக்கங்கள்   எனக்குப் பிடித்திருக்கின்றன. என்னால் இயன்ற வரை
எளிய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆனால், என்னைப்போன்ற
ஒருவருக்குச் சில செலவுகள் தவிர்க்க முடியாதவை.”

     என்னுடைய புகார்களில்          ஒன்றுக்கு இவ்வாறு அவர்
திருப்தியளிக்கும் வகையில் பதில்       சொல்லிவிட்டார். ஆனால்,
மற்றொரு புகாருக்கோ எனக்குத் திருப்தி     உண்டாகும் வகையில்
அவரால் பதில் சொல்லிவிட முடியவில்லை.

     “நீங்கள்        உலாவுவதற்குக்கூடப் போவதில்லை!  நீங்கள்
எப்பொழுதும் நோயுற்றே இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
பொதுவேலையில் ஈடுபடுவதனால்      தேகாப்பியாசத்திற்கு நேரமே
இல்லாது போக வேண்டுமா?” என்றேன்.

     “உலாவப் போவதற்கு எனக்கு எங்காவது நேரம் இருப்பதைப்
பார்க்கிறீர்களா?” என்று பதிலளித்தார். கோகலே.

     கோகலேயிடம் எனக்கு        அபாரமான மதிப்பு இருந்தது.