பக்கம் எண் :

426சத்திய சோதனை

Untitled Document
அதிகாரிகளினாலேயே        நியமிக்கப்படுகின்றனர் என்பதை என்
கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், இப்பிரிவுத் தலைவர்களை
இனி நியமிக்கும்போது தலைமை அதிகாரி         என் சிபாரிசைக்
கவனிப்பார் என்றும் எனக்கு உறுதி கூறினார்.

     இதற்குப் பிறகு எங்களுக்கிடையே      கடிதப் போக்குவரத்து
ஏராளமாக நடந்தது. ஆனால், கசப்பான இக்கதையை நீட்டிக்கொண்டு
போக நான் விரும்பவில்லை.       இந்தியாவில் தினந்தோறும் நான்
அடைந்துவரும் அனுபவத்தை ஒத்ததாகவே அங்கே எனக்கு ஏற்பட்ட
அனுபவமும் இருந்தது               என்று சொல்லுவதே போதும்.
மிரட்டல்களினாலும் சாதுர்யத்தினாலும்    தலைமை அதிகாரி எங்கள்
படையைச் சேர்ந்தவர்களிடையே பிளவை     உண்டாக்கி விட்டார்.
தீர்மானத்திற்குச் சாதகமாக      வோட்டு செய்திருந்தவர்களில் சிலர்,
தலைமை அதிகாரியின் மிரட்டல்களுக்கு அல்லது வற்புறுத்தல்களுக்கு
உடன்பட்டுப்போய்த் தங்கள் வாக்குறுதியையே மீறிவிட்டனர்.

     அந்தச் சமயத்தில்,         எதிர்பாராதவிதமாக காயமடைந்த
சிப்பாய்கள் ஏராளமாக நெட்லி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களுக்குப் பணிவிடை       செய்ய எங்கள் படையின் சேவை
கோரப்பட்டது. தலைமை             அதிகாரியின் வற்புறுத்தலுக்கு
உடன்பட்டவர்கள் நெட்லிக்குப் போனார்கள்.     மற்றவர்கள் போக
மறுத்துவிட்டனர். அப்பொழுது நான் படுத்த படுக்கையாக இருந்தேன்.
என்றாலும், அப்படையைச் சேர்ந்தவர்களுடன்     கடிதத் தொடர்பு
வைத்துக்கொண்டு இருந்தேன்.  உதவி இந்திய மந்திரி ஸ்ரீ ராபர்ட்ஸ்,
அந்த நாட்களில் பன்முறை என்னைப்      பார்க்க வந்து எனக்குக்
கௌரவம் அளித்தார். மற்றவர்களையும் சேவை செய்யப் போகுமாறு
நான் தூண்ட வேண்டும்         என்று வற்புறுத்தினார். அவர் ஒரு
யோசனையும் கூறினார். நாங்கள்       ஒரு தனிப்படையாக இருக்க
வேண்டும் என்றும், நெட்லி           வைத்தியசாலையில் இப்படை
அங்கிருக்கும் தலைமை          அதிகாரிக்கு மாத்திரமே பொறுப்பு
வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னார்.    அப்படிச் செய்வதால்
சுயமரியாதையை இழப்பதென்பதும் இல்லை.      அரசாங்கத்தையும்
சமாதானப்படுத்தியதாகும்;      ஆஸ்பத்திரிக்கு வரும் காயமடைந்த
ஏராளமானவர்களுக்கு உதவியான சேவை    செய்வதாகவும் ஆகும்
என்பதே அவர் கூறிய யோசனை. இந்த யோசனை   எனக்கும் என்
தோழர்களுக்கும் பிடித்திருந்தது.        இதன் பலனாக நெட்லிக்குப்
போகாமல் இருந்து விட்டவர்களும் அங்கே சென்றனர்.

     நான் மாத்திரம் போகவில்லை.    படுத்த படுக்கையாக இருந்து
கொண்டு என்னால் ஆனதைச் செய்துவந்தேன்.