பக்கம் எண் :

442சத்திய சோதனை

Untitled Document
இருந்தபோதிலும் அவர் நோயுற்றிருக்கும்போது,    என் உதவியைத்
தான் நாடுவார். அரை குறை வைத்தியனான என்னுடைய  சிகிச்சை
முறைகளை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்குவதில்லை.

     இந்த நண்பர் ஒரு சமயம் பெரிய        சங்கடத்தில் சிக்கிக்
கொண்டார். அநேகமாக தாம் செய்துவரும்   காரியங்களை எல்லாம்
அவர் என்னிடம் கூறி   வந்தாரெனினும், ஒரு விஷயத்தை மாத்திரம்
என்னிடம் சொல்லாமல் சாமர்த்தியமாக     மறைத்து வைத்திருந்தார்.
பம்பாயிலிருந்தும்,             கல்கத்தாவில் இருந்தும் ஏராளமாகச்
சாமான்களைத் தருவித்து வரும்   பெரிய வியாபாரி அவர். அடிக்கடி
சுங்கவரி கொடுக்காமல்      திருட்டுத்தனமாகச் சாமான்களை அவர்
கடத்திவிடுவதும்     உண்டு. ஆனால், சுங்க அதிகாரிகளுடன் நல்ல
நட்பிருந்ததால் அவர்மீது யாரும்     சந்தேகப்படுவதில்லை. தீர்வை
விதிக்கும் போது அவர் காட்டும் பட்டியல்களை நம்பி, அதன்படியே
தீர்வையும் விதிப்பார்கள். அவருடைய     திருட்டுத்தனம் தெரிந்தும்
சிலர் அதற்கு உடந்தையாகவும் இருந்திருக்கக் கூடும்.

     குஜராத்திக் கவியான அகோ என்பவர்   கூறியிருக்கும் சிறந்த
உவமையோடு சொல்லுவதென்றால்         பாதரசத்தைப் போலவே
திருட்டையும் வெகுநாளைக்கு மறைத்துவிட       முடியாது. பார்ஸி
ருஸ்தம்ஜி விஷயத்திலும் அது உண்மையாயிற்று. அந்த நல்ல நண்பர்
ஒருநாள் என்னிடம் ஓடி வந்தார்.            கன்னத்தில் கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தது. “பாய்! நான்   உங்களை ஏமாற்றி விட்டேன்.
என் குற்றத்தை இன்று           கண்டுபிடித்து விட்டார்கள். நான்
திருட்டுத்தனமாகச் சாமான்களை    இறக்குமதி செய்து அகப்பட்டுக்
கொண்டேன். என் கதி அதோகதிதான். நான் சிறைசென்று அழிந்தே
போய் விடுவேன். இந்த ஆபத்திலிருந்து       நீங்கள் ஒருவர்தான்
என்னைக் காப்பாற்றக் கூடும்.      இதைத் தவிர வேறு எதையுமே
உங்களிடம் கூறாமல் நான் ஒளித்ததில்லை.      ஆனால், வியாபார
தந்திரங்களைப்பற்றிய இந்த     விஷயங்களை எல்லாம் உங்களிடம்
சொல்லி, உபத்திரவப்படுத்த வேண்டாம் என்று   எண்ணியே இந்தக்
கள்ளக் கடத்தலைப்பற்றி உங்களுக்கு        நான் சொல்லவில்லை.
அதற்காக நான் இப்பொழுது      மிகமிக வருந்துகிறேன்” என்றார்.

     அவரைச் சாந்தப்படுத்தினேன்.        “உங்களைக் காப்பதும்
காவாததும் கடவுள் கையில் இருக்கிறது.       என்னைப் பொறுத்த
வரையில் என் வழி இன்னது என்பது       உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடுவதன்     மூலமே உங்களைக்
காப்பாற்ற நான் முயலக் கூடும்” என்று      அவருக்குக் கூறினேன்.

     இதைக் கேட்டதும் அந்த நல்ல      பார்ஸி அடியோடு மனம்
இடிந்து போய்விட்டார்.           “உங்கள் முன்பு நான் குற்றத்தை
ஒப்புக்கொண்டுவிட்டது போதாதா?” என்று கேட்டார்.