பக்கம் எண் :

518சத்திய சோதனை

Untitled Document
வேண்டியிருக்கிறது.           இந்த வேலையில் பலரை அமர்த்திக்
கொள்ளலாம்’ என்றார்.     இந்த யோசனையைத் தொழிலாளர்களும்
வரவேற்றார்கள். அனுசூயா பென்,     தமது தலையில் முதலில் ஒரு
கூடையைச் சுமந்து,        அவர்களுக்கு வழிகாட்டினார். அவரைப்
பின்பற்றித் தொழிலாளர்கள்      வரிசை வரிசையாக ஆற்றிலிருந்து
மணலை   வாரிக் கூடைகளைத் தங்கள் தலைகளில் சுமந்துகொண்டு
வந்து கொட்டிய வண்ணம் இருந்தனர்.         அது காண்பதற்கரிய
காட்சியாக இருந்தது.          தங்களுக்கு      ஏதோ புதிய பலம்
வந்திருப்பதாகவே தொழிலாளர்கள் உணர்ந்தனர்.    அவர்களுக்குச்
சம்பளத்தைப் பட்டுவாடா செய்து சமாளிப்பதே  கஷ்டமாக இருந்தது.

     என்னுடைய உண்ணாவிரதத்தில்  பெரிய குறைபாடும் இல்லாது
போகவில்லை. நான் முந்திய அத்தியாயத்தில் கூறியிருப்பதைப் போல,
ஆலை முதலாளிகளிடம்   நெருங்கிய தொடர்பும், அன்பான உறவும்
எனக்கு இருந்து வந்தது. ஆகவே      என்னுடைய உண்ணாவிரதம்
அவர்களுடைய தீர்மானத்தைப்       பாதிக்காமல் இருக்க முடியாது.
அவர்களை எதிர்த்து நான்         உண்ணாவிரதம் இருக்கக்கூடாது
என்பதைச்        சத்தியாக்கிரகி என்ற வகையில் நான் அறிவேன்.
தொழிலாளர் செய்திருக்கும் வேலை நிறுத்தம்   ஒன்றைக் கொண்டே
அவர்கள் சுயேச்சையான முடிவுக்கு வரும்படி விட்டிருக்க வேண்டும்.
நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது,      ஆலை முதலாளிகள்
செய்துவிட்ட                 தவறுக்காக அன்று. தொழிலாளர்கள்
பிரதிக்ஞையிலிருந்து         தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதம்
இருந்தேன். அவர்களுடைய பிரதிநிதி என்ற    வகையில், அவர்கள்
செய்த தவறில் எனக்கும்      பங்கு இருக்கிறது என்று கருதினேன்.
ஆலை முதலாளிகளிடம் நான்    வேண்டிக் கொள்ளலாம். ஆனால்,
அவர்களுக்கு        விரோதமாக உண்ணாவிரதம் இருப்ப தென்பது
அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகும். என்னுடைய  உண்ணாவிரதம்
அவர்களை            நிர்ப்பந்தப்படுத்தியே தீரும் என்பதை நான்
அறிந்திருந்தும் உண்மையிலேயே                அது அவர்களை
நிர்ப்பந்தப்படுத்தியது. உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர    எனக்கு
வேறு வழியில்லை என்று எண்ணினேன்.     உண்ணாவிரதம் இருக்க
வேண்டியதே என் கடமை என்று எனக்குத் தெளிவாகத் தோன்றியது.

     ஆலை        முதலாளிக்குச்    சமாதானம் கூற முயன்றேன்.
“உங்களுடைய நிலைமையிலிருந்து எனக்காக      நீங்கள் மாறியாக
வேண்டிய அவசியம் கொஞ்சமேனும் இல்லை” என்று அவர்களுக்குச்
சொன்னேன். ஆனால், என் வார்த்தைகளால் அவர்கள்   சமாதானம்
அடையவில்லை. நயமான மொழிகளால், உள்ளம்    வருந்தும்படியாக
என்னை ஏளனம் கூடச்  செய்தனர். அவ்விதம் செய்ய அவர்களுக்கு
முழு உரிமையும் உண்டு.