பக்கம் எண் :

அறிவூட்டிய சம்பாஷணை593

Untitled Document
ஆலோசனைகள் கூறிவந்ததோடு, மற்ற     ஆலை முதலாளிகளின்
அபிப்பிராயங்களையும்           அப்போதைக்கப்போது எனக்குத்
தெரிவித்தும் வந்தார். அந்த ஆலை        முதலாளிகளில் ஒருவர்
சொன்ன வாதங்கள் அவர்   மனத்தை அதிகம் கவர்ந்தன. அவரை
நான் சந்திக்க வேண்டும்   என்று உமார் ஸோபானி வற்புறுத்தினார்.
நானும் சம்மதித்தேன். அதன் பேரில் நாங்கள் சந்தித்துப் பேச அவர்
ஏற்பாடு செய்தார்.           ஆலை முதலாளி, சம்பாஷணையைப்
பின்வருமாறு ஆரம்பித்தார்:

     “இதற்கு முன்னாலேயே    சுதேசிக் கிளர்ச்சி நடந்துகொண்டு
வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?”

     “ஆம். அறிவேன்” என்றேன்.

     “வாங்காளப் பிரிவினைக்         கிளர்ச்சியின்போது ஆலை
முதலாளிகளாகிய நாங்கள், சுதேசி இயக்கத்தை     எங்கள் சொந்த
லாபத்திற்கு       முற்றும் பயன்படுத்திக் கொண்டோம்   என்பதும்
உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கம்     உச்ச நிலையில் இருந்த
சமயம், துணியின் விலையை    நாங்கள் உயர்த்தினோம். அதையும்
விட மோசமான காரியங்களையும் செய்தோம்.”

     “ஆம். அதைக் குறித்தும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதுபற்றி நான் மனம் வருந்தியதும் உண்டு.”

     “உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை  நான் அறிய முடியும்.
ஆனால், அவ்வாறு             வருத்தப்படுவதற்கு எந்தவிதமான
காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. நாங்கள் பரோபகார
நோக்கத்திற்காக எங்கள் தொழிலை நடத்திக்  கொண்டிருக்கவில்லை.
லாபத்திற்காகத்             தொழில் நடத்துகிறோம். அதில் பங்கு
போட்டிருப்பவர்களையும் நாங்கள்   திருப்தி செய்ய வேண்டும். ஒரு
பொருளின் விலை ஏறுவது, அப்பொருளுக்கு இருக்கும் கிராக்கியைப்
பொறுத்தது. தேவைக்கும்            சரக்கு விற்பனைக்கும் உள்ள
சம்பந்தத்தைப்பற்றிய விதியை யார்   தடுத்துவிட முடியும்? சுதேசித்
துணிகளின் தேவையை அதிகரிப்பதனால்    அத்துணிகளின் விலை
ஏறித்தான் தீரும் என்பதை         வங்காளிகள் அறிந்தே இருக்க
வேண்டும்.”

     நான் குறுக்கிட்டுக் கூறியதாவது:       “என்னைப் போன்றே
வங்காளிகளும் பிறரை எளிதில் நம்பிவிடும்   சுபாவமுள்ளவர்களாக
இருக்கிறார்கள். ஆலை முதலாளிகள்      இவ்வளவு படுமோசமான
சுயநலக்காரர்களாகவும்         தேசாபிமானம் இல்லாதவர்களாகவும்
இருந்துவிட மாட்டார்கள் என்று      பரிபூரணமாக அவர்கள் நம்பி
விட்டார்கள்.   தாய்நாட்டிற்கு நெருக்கடியான நிலைமை நேர்ந்துள்ள
சமயத்தில் ஆலை முதலாளிகள்,       அவர்கள் செய்துவிட்டதைப்
போன்று, அந்நிய நாட்டுத் துணியைச்        சுதேசித் துணி என்று
மோசடியாக விற்றுவிடும்     அளவுக்குப் போய்த் துரோகம் செய்து
விடுவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.”