பக்கம் எண் :

594சத்திய சோதனை

Untitled Document
     “பிறரை எளிதில் நம்பிவிடும்     சுபாவமுள்ளவர்கள் நீங்கள்
என்பது எனக்குத் தெரியும். அதனால்தான்     என்னிடம் வரும்படி
உங்களுக்குக்             கஷ்டத்தையும்   கொடுத்தேன். கபடம்
இல்லாதவர்களான   வங்காளிகள் செய்துவிட்ட      அதே தவறை
நீங்களும் செய்து     விடவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கை
செய்யவே இங்கே வரும்படி செய்தேன்” என்றார் அவர்.

     இவ்வாறு கூறிவிட்டு, பக்கத்தில்    நின்றுகொண்டிருந்த தமது
குமாஸ்தாவை அழைத்து, தமது  ஆலையில் தயாராகும் துணிகளின்
மாதிரிகளைக் கொண்டுவரும்படி    கூறினார். அதைச் சுட்டிக்காட்டி
அவர் என்னிடம் கூறியதாவது:        “இதைப் பாருங்கள்; எங்கள்
ஆலையில் இப்பொழுது      கடைசியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும்
துணியின் மாதிரி இது. இதற்குக் கிராக்கி       ஏராளமாக இருந்து
வருகிறது. வீணாகப் போகும் கழிவிலிருந்து இதைத் தயாரிக்கிறோம்.
ஆகையால், இயற்கையாகவே இது மலிவானது. வடக்கே ஹிமாலயப்
பள்ளத்தாக்குகள் வரையில்   இதை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
நாடெங்கும் எல்லா இடங்களிலுமே - உங்கள்   குரலும், ஆட்களும்
போகவே முடியாத இடங்களிலும்கூட - எங்களுக்கு   ஏஜெண்டுகள்
இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குப் புதிதாக,    அதிகப்படியான
ஏஜெண்டுகள் தேவை இல்லை        என்பதை நீங்கள் காணலாம்.
அதோடு, இந்தியாவில் அதன் தேவைக்குப் போதுமான அளவு துணி
உற்பத்தி ஆகவில்லை      என்பதையும்  நீங்கள் அறியவேண்டும்.
ஆகவே, சுதேசி இயக்கம், இங்கே துணி உற்பத்தி அதிகமாவதையே
பெரிதும் பொறுத்திருக்கிறது. நாங்கள் உற்பத்தி செய்வதைப் போதிய
அளவு அதிகரித்து,   அவசியமாகும் அளவுக்கு அதன் தரத்தையும்
எப்பொழுது அபிவிருத்தி      செய்துவிடுகிறோமோ அப்பொழுதே
அந்நியத் துணி இறக்குமதி, தானே நின்று போய்விடும். ஆகையால்,
நான் உங்களுக்குக் கூறும் யோசனை     என்னவென்றால், நீங்கள்
இப்பொழுது நடத்தி வரும் முறையில்        உங்கள் கிளர்ச்சியை
நடத்திவர வேண்டாம்; ஆனால், புதிதாக ஆலைகளை அமைப்பதில்
உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்பதே. இப்பொழுது நமக்குத்
தேவையெல்லாம்       உற்பத்தியை   அதிகப்படுத்த வேண்டியதே
அன்றி எங்கள்        சரக்குகளுக்குத் தேவையை அதிகப்படுத்தப்
பிரச்சாரம் செய்வதன்று.”

     “அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் இதே   காரியத்திலேயே
இப்பொழுதே நான் ஈடுபட்டிருக்கிறேனென்றால்,    என் முயற்சியை
நீங்கள் வாழ்த்துவீர்களல்லவா?” என்று கேட்டேன்.

     கொஞ்சம் திகைத்துப்போய், “அது எப்படி முடியும்?” என்றார்,
அவர். “ஆனால், புதிய ஆலைகளை அமைப்பதைக் குறித்து நீங்கள்
எண்ணிக்கொண்டிருக்கலாம்.  அப்படியானால், நிச்சயமாக உங்களைப்
பாராட்ட வேண்டியதே” என்றார்.