பக்கம் எண் :

595

Untitled Document
     “நான் இப்பொழுது செய்துகொண்டிருப்பது அதுவல்ல. ஆனால்,
கைராட்டினத்திற்குப் புத்துயிர்        அளிப்பதில் நான் இப்பொழுது
ஈடுபட்டிருக்கிறேன்” என்று அவருக்கு விளக்கிச் சொன்னேன்.

     இன்னும்       குழப்பமடைந்தவராகவே அவர், “அது என்ன
விஷயம்?” என்று என்னைக் கேட்டார்.   கைராட்டினத்தைப் பற்றிய
விவரங்களையும், அதைக்        கண்டுபிடிப்பதற்காக வெகு காலம்
தேடியலைந்ததைப் பற்றியும்      அவருக்குச் சொல்லி நான் மேலும்
கூறியதாவது: “இவ் விஷயத்தில் என் அபிப்பிராயம் முற்றும் உங்கள்
அபிப்பிராயமே ஆகும்.      ஆலைகளின் ஏஜெண்டாகவே நானும்
ஆகிவிடுவதில்            எந்தவிதமான பயனும் இல்லை. அப்படி
ஆகிவிடுவதனால்      நாட்டிற்கு     நன்மையை விடத் தீமையே
அதிகமாகும். நம்     மில் துணிகளை   வாங்குகிறவர்கள் இன்னும்
வெகுகாலம் வரையில்        குறையவே மாட்டார்கள். ஆகையால்,
கையினால் நூற்ற துணி உற்பத்திக்கு     ஏற்பாடு செய்து, அவ்விதம்
தயாரான கதர், விற்பனையாகும்படி பார்ப்பதே     என் வேலையாக
இருக்க வேண்டும்,             இருந்தும் வருகிறது. எனவே, கதர்
உற்பத்தியிலேயே  என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.
இந்த வகையான சுதேசியத்திலேயே        நான் அதிக நம்பிக்கை
கொண்டிருக்கிறேன். ஏனெனில்,    அரைப்பட்டினி கிடந்து, போதிய
வேலையும் இல்லாமல் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இதன்மூலம்,
நான் வேலை கொடுக்க முடியும்.         இந்தப் பெண்களை நூல்
நூற்கும்படி செய்து, அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை இந்திய
மக்கள் உடுத்தும்படி செய்ய வேண்டும்     என்பதே என் நோக்கம்.
இந்த இயக்கம் இப்பொழுது ஆரம்பக்கட்டத்திலேயே    இருக்கிறது.
ஆகையால், இந்த இயக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது
தெரியாது. என்றாலும், இதில் பூரணமான      நம்பிக்கை இருக்கிறது.
எப்படியும் அதனால்       எந்தவிதமான தீமையும் விளைந்துவிடப்
போவதில்லை. அதற்கு மாறாக, நாட்டின் துணி   உற்பத்தி நிலையை
அது              அதிகமாக்கும் அளவுக்கு - அந்த அளவு மிகக்
குறைவானதாகவே இருந்தாலும்,       அந்த அளவுக்கு - அதனால்
நிச்சயமான நன்மையே உண்டு. ஆகவே,   நீங்கள் குறிப்பிட்ட தீமை
எதுவும் இயக்கத்தில்       கிடையாது என்பதை   நீங்கள் அறிந்து
கொள்ளலாம்.”

     அதன் பேரில் அவர் கூறியதாவது:     “உங்கள் இயக்கத்தை
நீங்கள் நடத்துவதற்கு நாட்டின்    துணி உற்பத்தியை அதிகரிப்பதே
நோக்கமென்றால், அதற்கு              விரோதமாக நான் எதுவும்
சொல்லுவதற்கில்லை. ஆனால், இயந்திர யுகமான  இந்தக் காலத்தில்
கைராட்டினம் முன்னேற முடியுமா என்ற விஷயம் வேறு இருக்கிறது.
என்றாலும், நீங்கள்           வெற்றிபெற வேண்டும் என்றே நான்
விரும்புகிறேன்.”