பக்கம் எண் :

8சத்திய சோதனை

Untitled Document

விவாகத்தினாலேயே தங்களுக்கு நாசத்தைத் தேடிக்கொள்ளுகின்றனர்.
அவர்கள் தங்கள்    சொத்தையும் வீணாக்குகிறார்கள்; காலத்தையும்
வீணாக்குகிறார்கள்.    ஆடைகள் தயாரிப்பது,   நகைகள் செய்வது,
விருந்துகளுக்கு வேண்டிய   திட்டங்கள் போடுவது என்ற வகையில்
முன்னேற்பாடுகளுக்கே   பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. விருந்துப்
பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும் வகையிலும்,  ஒவ்வொருவரும்
மற்றவரை    மிஞ்சிவிட வேண்டும்         என்று முயல்கிறார்கள்.
பெண்களுக்குக் குரல் நன்றாக      இருக்கிறதோ இல்லையோ, ஏகக்
கூப்பாடு போட்டுப் பாடுகிறார்கள். நோய்வாய்ப்படவும் செய்கிறார்கள்;
அண்டை வீட்டுக்காரர்கள்   அமைதியோடு இருக்க முடியாத படியும்
செய்து விடுகிறார்கள். இத்தகைய கூச்சல், குழப்பங்களையும், விருந்து
இலைகளில்   மிஞ்சியதையும்,     குப்பையையும்,   மற்றும்   சகல
ஆபாசங்களையும்    பக்கத்து     வீட்டுக்காரர்களும்     சகித்துக்
கொள்கிறார்கள்.    ஏனெனில், தாங்களும்    அவ்வாறே    நடந்து
கொள்ளவேண்டிய ஒரு சமயம் வரும் என்பது      அவர்களுக்குத்
தெரியும்.

     இந்தத் தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது
எவ்வளவோ நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர்.இப்படிச்
செய்தால்          செலவும் குறைவாக இருக்கும் ;   ஆடம்பரமும்
அதிகமாயிருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்குப்  பதிலாக
ஒரே தடவையில்      செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாகச்
செலவிடலாம். என்  தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகிவிட்டது.
அவர்கள் விவாகம்   செய்து வைக்க   வேண்டியிருந்த   கடைசிக்
குழந்தைகள் நாங்கள். தங்கள்  கடைசிக்காலத்தில்   சந்தோஷமான
காரியத்தைச்    செய்துவிட்டுப் போவோமே   என்றும்   அவர்கள்
எண்ணியிருக்கக்  கூடும். இவற்றையெல்லாம்   முன்னிட்டு   மூன்று
விவாகங்களையும் ஒரே சமயத்தில் முடித்துவிடுவது    என்று முடிவு
செய்தனர். நான் முன்பே      கூறியிருப்பதைப்போல, இவற்றிற்கான
ஏற்பாடுகளை எல்லாம் செய்து  முடிப்பதற்கு மாதங்கள் பல ஆயின.

     இத்தகைய   முன்னேற்பாடுகளையெல்லாம்    பார்த்த பிறகே,
நடைபெற இருக்கும்   சம்பவங்களைப்பற்றி நாங்கள் அறியலானோம்.
உடுத்துக்கொள்ள நல்ல ஆடைகள்  கிடைக்கும்;     மேளதாளங்கள்
இருக்கும்: கல்யாண ஊர்வலங்கள்  இருக்கும்;   பிரமாதமான விருந்து
நடக்கும் ; இவற்றுடன், சேர்ந்து    விளையாடுவதற்கு    விசித்திரப்
பெண் ஒருத்தியும்    கிடைப்பாள்        என்பதைத்தவிர, விவாகம்
என்பதைப் பற்றி எனக்கு அப்பொழுது    வேறொன்றுமே தெரியாது.
சிற்றின்ப இச்சை       பிறகுதான் ஏற்பட்டது. குறிப்பிடக்கூடிய சில
விவகாரங்களைத் தவிர நான் வெட்கப்பட வேண்டிய பிறவற்றை