பக்கம் எண் :

90சத்திய சோதனை

Untitled Document

     நாராயண ஹேமசந்திரருக்கு இலக்கணம் என்பதே    தெரியாது.
குதிரை’ என்பது வினைச்சொல் என்பார். ‘ஓடு’ என்பது பெயர்ச்சொல்
என்பார். இப்படிப்பட்ட     வேடிக்கையான பல சம்பவங்கள் எனக்கு
நினைவு       இருக்கின்றன.   ஆனால்,   தம்முடைய   இத்தகைய
அறியாமைக்காக அவர்   கவலைப்படுவதே இல்லை.  இலக்கணத்தில்
எனக்கு  இருந்த சிறிது அறியும் அவர் விஷயத்தில் பயன்படவில்லை.
இலக்கணத்தைக் குறித்துக்     தமக்கிருந்த அறியாமை,  வெட்கப்பட
வேண்டியது என்று அவர் கருதியதே      இல்லை என்பது நிச்சயம்.

     அவர் கொஞ்சமேனும் கவலைப்படாமல் என்னிடம்,“உங்களைப்
போல் நான்         பள்ளிக்கூடத்திற்குப் போனதே இல்லை.  என்
கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு  இலக்கணம் அவசியம் என்று
நான் உணர்ந்ததும் இல்லை. அது சரி; உங்களுக்கு  வங்காளி மொழி
தெரியுமா? எனக்கு அது தெரியும் ;  நான் வங்காளத்தில் பிரயாணம்
செய்திருக்கிறேன்.    மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் நூல்களைக்
குஜராத்தி பேசும் உலகத்துக்கு அளித்தவனே நான்தான். மற்றும் பல
மொழிகளில் இருக்கும்    பொக்கிஷங்களையெல்லாம் குஜராத்தியில்
மொழிபெயர்க்க       நான் விரும்புகிறேன்.   மூலத்திற்கு நேரான
மொழிபெயர்ப்பை       நான் செய்வதில்லை  என்பது உங்களுக்கு
தெரியும்.     மூலத்தின்    கருத்தைக் கொண்டு வருவதோடு நான்
திருப்தியடைந்து விடுகிறேன்.   என்னைவிட அறிவில் சிறந்தவர்கள்
பிற்காலத்தில் இன்னும் அரிய  வேலைகளைச் செய்யலாம். ஆனால்,
இலக்கணத்தின்     உதவி     இல்லாமலேயே    நான் இதுவரை
செய்திருப்பதில் திருப்தியடைகிறேன்.    எனக்கு மராத்தி,  ஹிந்தி,
வங்காளி     ஆகிய மொழிகள் தெரியும். இப்பொழுது  ஆங்கிலம்
கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன்.     ஏராளமான  சொற்கள்
தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.     என் ஆசை
இதோடு முடிந்துவிட்டதென்று     எண்ணுகிறீர்களா?    இல்லவே
இல்லை.  பிரான்ஸு க்குப் போய்ப்         பிரெஞ்சு மொழி கற்க
விரும்புகிறேன். அம்மொழியில் இலக்கியச் செல்வம் ஏராளம் என்று
கேள்விப்படுகிறேன்.      சாத்தியமானால்,   ஜெர்மனிக்குப் போய்
ஜெர்மன் மொழியையும் கற்பேன்” என்று சொன்னார்.

     இவ்விதம் அவர் விடாமல்   பேசிக்கொண்டே போவார். பிற
மொழிகளைக் கற்பதிலும், வெளிநாடுகளில்      சுற்றுப் பிரயாணம்
செய்வதிலும் அவருக்கு இருந்த ஆசைக்கு    எல்லையே இல்லை.

     “அப்படியானால் நீங்கள்     அமெரிக்காவுக்கும் போவீர்கள்
அல்லவா?”

     “நிச்சயமாகப் போவேன். புதிய உலகத்தைப் பார்க்காமல் நான்
எப்படி இந்தியாவுக்குத் திரும்பிவிட முடியும்?”