பக்கம் எண் :

நாராயண ஹேமசந்திரர்91

Untitled Document
     ஆனால், இதற்கெல்லாம்     பணத்திற்கு என்ன செய்வீர்கள்?”

     “எனக்குப் பணம்       எதற்காக?   உங்களைப்போல  நான்
நாசூக்கானவன் அல்ல. எனக்குக் குறைந்த அளவு சாப்பாடும்,குறைந்த
அளவு உடையும் போதும். என்  புத்தகங்களின் விற்பனையிலிருந்தும்
என் நண்பர்களிடம் இருந்தும்    கிடைப்பதே இதற்குப் போதுமானது.
நான் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பு வண்டியிலேயே     பிரயாணம்
செய்கிறேன். அமெரிக்காவுக்குப் போகும் போதும்   கப்பலில் கடைசி
வகுப்பிலேயே நான் போவேன்.”

     நாராயண ஹேமசந்திரரின்      எளிய வாழ்க்கை  அவருக்கே
உரியது.    அந்த எளிய வாழ்க்கைக்கு     ஏற்றாற் போல் இருந்தது
அவருடைய கபடமற்ற தன்மையும். கர்வம்       என்பதே அவரிடம்
கொஞ்சமேனும் இல்லை. ஆனால்,  நூலாசிரியர்  என்பதில் மாத்திரம்
தம்முடைய திறமையைப்பற்றிக் கொஞ்சம் அதிகப்படியாகவே   அவர்
எண்ணிக்கொண்டிருந்தார்.

     நாங்கள் தினந்தோறும் சந்திப்போம்.   எங்கள்   இருவருடைய
எண்ணங்களும். செயல்களும்      அநேக விஷயங்களில் ஒரேமாதிரி
இருந்தன. நாங்கள் இருவரும்      சேர்ந்து, மத்தியான வேளைகளில்
சாப்பிடுவோம். வாரத்திற்கு 17 ஷில்லிங்    செலவில் வாழ்ந்து நானே
சமைத்துக்கொண்ட சமயம் அது. சில சமயங்களில் அவர்     இருந்த
இடத்திற்கு நான் போவேன்; சில சமயங்களில்    அவர் நான் இருந்த
இடத்திற்கு வருவார்.     ஆங்கில தோரணையில்    நான் சமையல்
செய்துவந்தேன். இந்திய     முறைச் சமையல் தவிர வேறு எதுவுமே
அவருக்குப் பிடிக்காது. பருப்பு இல்லாமல்    அவருக்குச் சரிப்படாது.
காரட்      முதலியவைகளைக் கொண்டு நான்,   ‘சூப்’ தயாரிப்பேன்.
எனக்கு இப்படியும்       ருசி கெட்டுப் போய்விட்டதே என்று அவர்
பரிதாபப்படுவார். ஒருநாள்     இந்தியக்      காராமணியை எங்கோ
தேடிப்பிடித்துச்    சமைத்து,   அதைக்    கொண்டுவந்தார்.   நான்
மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டேன். அதிலிருந்து ஒருவருக்கொருவர்
கொடுப்பதும் வாங்கிக்கொள்ளுவதுமான முறை ஆரம்பமாயிற்று. நான்
சமைத்ததை அவருக்குக்     கொண்டுபோய் கொடுப்பேன் ;  அவர்
சமைத்ததை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்.

     அச் சமயத்தில்     கார்டினல் மானிங்கின் பெயர்     எங்கும்
பிரசித்தமாக இருந்தது.     ஜான் பர்ன்ஸ், காரடினல் மானிங் ஆகிய
இருவரின் முயற்சியினால்  துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம்
சீக்கிரத்தில் முடிவுற்றது. கார்டினலின் எளிய வாழ்க்கையைக் குறித்து,
டிஸ்ரேலி    பாராட்டிக்     கூறியிருக்கிறார் என்று       நாராயண
ஹேமசந்திரரிடம் சொன்னேன்.    “அப்படியானால் அந்த முனிவரை
நான் பார்க்க வேண்டும்” என்றார், அவர்.