பக்கம் எண் :

124தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பல ஐரோப்பியர்கள் வாணிபத் தலங்கள் அமைத்தனர்.
கி.பி. 1612 முதல் 1660 வரை இங்குப் போர்ச்சுகீசியர்கள்
வாணிபச் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தஞ்சை நாயக்க
மன்னர் விஜயராகவனிடம் நாகப்பட்டினத்தில் வாணிபம்
செய்ய உரிமை பெற்ற டச்சுக்காரர்கள் கி.பி. 1660 முதல் 1781
வரை இங்கு வாணிபத்தில் ஆதிக்கம் செலுத்தினர். தஞ்சை
மராத்திய மன்னர் எகோஜி டச்சுக்காரர்கள் தஞ்சை நாயக்க
மன்னரிடம் பெற்ற உரிமையை உறுதிப்படுத்தினார் (1676).
டச்சுக்காரர்களின் வீழ்ச்சியை அடுத்து, கி.பி. 1781இல் இந்நகர்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆதிக்கத்தில் வந்தது.
கி.பி. 1799 முதல் 1845 வரை இந்நகர் தஞ்சாவூர் மாவட்டத்தின்
தலைமையிடமாக இருந்தது. கி.பி. 1845 வரை இது முக்கியத்
துறைமுக நகராக விளங்கிற்று, சென்னைத் துறைமுத்தின்
தோற்றத்தினாலும், சென்னை-தூத்துக்குடி இருப்புப்பாதையுடன்
இணைக்கப்பட்டதாலும்(1876) நாகப்பட்டினம் துறைமுகத்தின்
முக்கியத்துவம் குறைந்தது.

சுதந்தர இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு
சிறு துறைமுக நகராக நாகப்பட்டினம் விளங்குகிறது. இந்நகரில்
காயரோகண சுவாமி கோவிலும் சௌந்திரராஜ சுவாமி
கோவிலும் முக்கிய இந்துக் கோவில்களாக உள்ளன.

லூர்து அன்னை ஆலயம் இந்நகரிலுள்ள பழமைமிக்க
கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயதாகும்.

நாகூர்

நாகப்பட்டினம் நகராட்சியில் நாகூர் உள்ளது. நாகூர்
இஸ்லாமிய மக்களின் புனிதத் தலம் ஆகும். இங்குள்ள தர்காவில்
ஹசாரத் சையது சாகுல் ஹமீது
என்ற பெரியார்
கி.பி.17ஆம் நூற்றாண்டில் அடக்கம் ஆகியுள்ளார். இப்பெரியார்
இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்த தீர்க்கதரிசி முகமது நபியின்
வழித் தோன்றியவராவார். இவர் நாகூர் ஆண்டவர் எனப்படுகிறார்.
நாகூர் தர்காவில் இந்துக்களும் தொழுகை நடத்துகின்றனர்.
இந்து-இஸ்லாமிய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சிறந்த இடமாக
நாகூர் தர்கா உள்ளது.