சிவன்மீது கொண்ட பக்தியினாலும் தம் புதிய தலைநகரத்தில்
ஒரு சிவாலயத்தை எழுப்பினார். இது ‘கங்கை கொண்ட
சோழீசுவரம்’ எனப்பட்டது. கங்கை கொண்ட சோழீசுவரத்தின்
சிறப்பினைச் சிறிது இங்குப் பார்ப்போம்.
1. விமானம், அக மண்டபம், முக மண்டபம், அம்மன்
கோவில் திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங்கள் முதலிய
அங்கங்கள் உள்ளிட்டு யாவும் ஒரே காலத்தில் கட்டப்பட்ட
சிறப்பினைக் கங்கை கொண்ட சோழீசுவரம் கோவில்
கொண்டுள்ளது.
2. கோவிலின் கட்டடப்பகுதிகள் யாவும்
கருங்கல்லினாலானவை. போக்குவரவு வசதி இல்லாத
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வெகு தூரத்திலிருந்து பல டன்
எடையுள்ள கருங்கற்களைக் கொண்டுவந்து ஒரு பெரிய
கற்கோவிலமைத்திருப்பதை யாரும் பாராட்டாமலிருக்க முடியாது.
3. கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும்,
தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டட மற்றும் சிற்பக்கலையில்
பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன. கங்கை கொண்ட
சோழபுரக் கோவில் தஞ்சைக் கோவிலைப் போல்
உயரமான
அதிட்டான மேடைமீது ஏற்றிக் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும்
இக்கோவிலின் அதிட்டான மேடை, கட்டடக்கலையில்
தஞ்சைக்
கோவிலையும் விஞ்சும் அளவில் உள்ளது. ஆனால்,
தஞ்சைக்
கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்படாத புதிராக
உள்ளது.
4. தஞ்சைப் பெரிய
கோவிலைப் போல் கங்கை கொண்ட
சோழபுரக் கோவிலும் சிறப்புமிக்க விமானத்தைப் பெற்றுள்ளது.
தஞ்சை விமானத்தைப்போல், இவ்விமானமும் கவர்ச்சிமிக்கது.
மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சையைப்
போல் அடிமுதல் ஸ்தூபிவரை கருங்கல்லாலாகியது. ஆனால்,
தஞ்சை விமானத்தைவிட உயரத்தில் குறைவாக உள்ளது.
தஞ்சை விமானத்தின் உயரம் 61 மீட்டர்.கங்கை கொண்ட
சோழபுரக் கோவிலின் விமானம் 55 மீட்டர் உயரமுள்ளது.
|