பக்கம் எண் :

150தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

7. கோவிலின் வாயிலை அடுத்து வலப்புறத்திலுள்ள
நவக்கிரகச்சிலை
புகழ்மிக்கதாகும். ஒரே கல்லால் அமைக்கப்பட்ட
இந்த நவக்கிரகச் சிலையைப்போல் இந்தியாவில் எங்கும்
அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நவக்கிரகம்
உள்ள மகா மண்டபத்தில் மேலும் பல அரிய சிற்பங்கள்
உள்ளன.

8. கர்ப்பகிருகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக
முக்கியமான அம்சம் ஆகும். மூல லிங்கம் மிகப்பெரிய
வடிவுள்ளது. ஒரே கல்லாலானது. தஞ்சைக் கோவிலிலுள்ள
லிங்கத்தைவிடச் சற்றுப் பெரியது. இந்த லிங்கம் உலகிலேயே
பெரியது என்று கூறப்படுகிறது. பகலில் எந்தவித மின்விளக்குச்
சாதனமும் இல்லாத இருட்டான சூழ்நிலையில் கருவறையிலுள்ள
லிங்கத்தின்மீது மட்டும் சூரிய ஒளி பிரதிபலிப்பு ஏற்படுவது
விநோதமாக உள்ளது!

9. கோவிலிலுள்ள செப்புத் திருமேனிகள் சிறப்புமிக்கவை.
இவற்றுள் குறிப்பிடத்தக்கது சோமாஸ்கந்தர் சிலையும்
சுப்பிரமணியரது சிலையும் ஆகும். இவை சோழர் காலத்து
வார்ப்புக்கலைத் திறனைக் காட்டுகிறது.

10. சிங்கக் கிணறு இக்கோவிலின் மற்றொரு சிறப்பு
ஆகும். இராசேந்திர சோழன் தனது வடஇந்தியப் படையெடுப்பின்
பொழுது கொண்டுவந்த கங்கை நீரின் ஒரு பகுதியை இக்கிணற்றில்
ஊற்றினார் என்று கூறப்படுகிறது. இக்கிணற்றின் நீர் இன்றும்
பயன்படும் நிலையில் உள்ளது. உடையார்பாளையம்
நிலக்கிழாரால் சிங்கமுகம் கட்டப்பட்டதாகும்.

கோவிலின் வாயிலில் இராசேந்திர சோழன் காலத்தில்
அமைத்த கோபுரம் இன்று பாழடைந்த சில கற்களின்
அடித்தளத்துடன் மட்டும் காணப்படுகிறது. இந்நகரிலிருந்து
11 கி.மீ. தொலைவிலுள்ள கொள்ளிட நதியில் ஓர் அணையைக்
கட்டுவதற்குப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இக்கோவிலின்
கோபுரத்திலிருந்தும், மதில் மற்றும் முன் மண்டபங்களிலிருந்தும்
கருங்கற்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். (1836).