பக்கம் எண் :

162தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

திருச்சியிலிருந்து மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருமலையின்
பெயரன் சொக்கநாதன் (1659-1682) கி.பி. 1665இல் தம்
தலைநகரை மீண்டும் திருச்சிக்கு மாற்றினார். இவர் திருச்சியில்
ஒரு மாளிகை கட்டி, திருச்சி நகரை அழகுபடுத்தினார்.
சொக்கநாதரின் ஆட்சிக்காலம் முதல் மதுரை நாயக்க அரசு
முடிவுற்ற காலம்வரை (கி.பி.1736) திருச்சியே மதுரை நாயக்க
அரசின் தலைநகராக இருந்தது. நாயக்கர் ஆட்சிக்குப்பின்
திருச்சி ஆர்க்காட்டு நவாபின் அதிகாரத்தின்கீழ் வந்தது.
மராட்டியரின் வெற்றியினால் கி.பி.1741 முதல் 1743 வரை
திருச்சி மராட்டியரின் ஆட்சியிலிருந்தது. முராரி ராவ் என்பவர்
மராட்டிய ஆளுநராகத் திருச்சியில் நியமிக்கப்பட்டார்.
கி.பி. 1743இல் ஹைதராபாத் நிஜாம் அசப்ஷா மராட்டியர்களை
வென்று திருச்சியைக் கைப்பிற்றினார். இப்பகுதியின் ஆட்சியைக்
கவனிக்க நிஜாம் குவாஜா அப்துல்லா என்பவரை நியமித்தார்.
இவர் இறந்தபின் (1744) ஆர்க்காட்டு நவாபான அன்வாருதீன்
ஆட்சியின்கீழ் திருச்சி வந்தது. அன்வாருதீன் இறந்தபின்(1749)
ஆர்க்காட்டு நவாபின் பதவிக்கு அன்வாருதீனின் மகன் முகமதலி,
சந்தா சாகிப் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.
இப்போட்டிக் காலத்தில் கர்நாடகப் போர்கள் நடந்தன.
கர்நாடகப் போர்களின் பொழுது திருச்சி பல தாக்குதல்களுக்கு
உட்பட்டது.

ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிக்குப்பின் திருச்சி
ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் வந்தது. திருச்சி மாவட்டத்தின்
தலைமையிடமாக இன்றைய திருச்சி நகர் விளங்குகிறது.
திருச்சி நகர் 1866ஆம் ஆண்டு நகராட்சி ஆயிற்று.

மக்கள் தொகை அடிப்படையில் திருச்சி தமிழ்நாட்டின்
நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது. மற்ற மூன்று
நகரங்கள் (சென்னை, மதுரை, கோயமுத்தூர்) கி.பி. 1901இல்
திருச்சி நகரின் மக்கள் தொகை 1,04,721 ஆகும். இந்நகரின்
1981 ஆம் வருட மக்கள் தொகை (நகர்ப்புறங்கள்
இணைந்தது) 6,07,815.

தமிழ்நாட்டின் மத்தியில் சிறப்புடன் விளங்கும் திருச்சி
நகரில் நமது பண்பாட்டின் பெருமைக்குரிய சின்னங்கள்பற்றிப்
பின்வரும் பகுதியில் காணலாம்.