தஞ்சையில் ஆட்சிபுரிந்த ஆதித்த சோழன் காலக்கோவிலாகும்.
இது ஒரு கற்கோவிலாகும். அழகிய விமானத்தை இக்கோவில்
கொண்டுள்ளது. பிற்காலச் சோழர் காலச் சிற்ப, கட்டடக்
கலைத்திறனுக்கு இக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருச்சி நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில்
ஏலாக்குறிச்சி
உள்ளது. இவ்வூருக்கு அருகில் திருக்காவலூர் உள்ளது.
வீரமாமுனிவர் (கி.பி.1680-1747) சமயப் பணியாற்றிய இடங்களில்
இத்தலமும் ஒன்றாகும்.
கான்ஸ்டான்டைன் பெஸ்கி என்னும் இயற்பெயரைக்
கொண்ட வீரமாமுனிவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
கிறித்தவ சமயப் பணிக்காகக் கி.பி. 1711இல் இவர் இந்தியாவிற்கு
வந்தார். கி.பி. 1711 முதல் 1747 வரை இவர் பல இடங்களில்
சமயப் பணியாற்றினார். இவர் சமயப் பணியாற்றிய இடங்களில்
ஏலாக்குறிச்சியும் ஒன்றாகும். நாயக்க அரசின் வீழ்ச்சியைத்
தொடர்ந்து (கி.பி.1736) சந்தா சாகிப்பின் ஆட்சியில் திருச்சி
வந்தது. திருச்சிப் பகுதியில் சமயப் பணியாற்றிய வீரமா முனிவர்
சந்தா சாகிப்பின் நட்பைப் பெற்றார். அவர் அமைச்சராகவும்
சில ஆண்டுகள் விளங்கினார். ஏலாக்குறிச்சிக்கு அருகில்
மரியம்மைக்கு ஓர் அழகிய கோவிலைக் கட்டினார்.
அடைக்கல மாதா கோவில் என இது அழைக்கப்பட்டது.
இம்மாதாவின் காவலில் அமைந்த ஊர் ‘திருக்காவலூர்’
என்று பெயரிடப்பட்டது.
இத்தாலிய நாட்டு அறிஞரான வீரமாமுனிவர், தமிழ்
மொழியைக் கற்று, இம்மொழியில் சிறந்த அறிஞராகவும்
விளங்கினார். தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய மேலைநாட்டு
அறிஞர்களில் முதன்மையானவராக வீரமாமுனிவர் கருதப்படுகிறார்.
தம் பெயரைத் தைரியநாதர் என்றும் வைத்துக்கொண்டார்.
தமிழ் மொழியில் முதன்முதலில் அகராதி (சதுரகராதி) எழுதிய
பெருமை வீரமாமுனிவரைச் சேரும். ‘தேம்பாவணி’ வீரமாமுனிவரது
அரிய படைப்பாகும். இந்நூல் 3615 பாக்களைக் கொண்டுள்ளது.
பரமார்த்த குரு கதை, வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம்,
‘தொன்னூல் விளக்கமும் உரையும்’ ஆகியவை இவரது மற்ற
நூல்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
|