சங்க காலம்
‘சங்க காலம்’ என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை
உள்ள பண்டைக்காலத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
இக்காலத்தில் ‘சங்கம்’ இருந்து தமிழ் வளர்க்கப்பட்டது.
அன்றைய குமரியம்பெருந்துறை என்ற இன்றைய
கன்னியாகுமரிக்குத் தெற்கிலுள்ள தென்மதுரையில் முதல் தமிழ்ச்
சங்கமும், ‘பாண்டியகவாட’ என்று இராமாயணம் சுட்டும்
கபாடபுரத்தில் இரண்டாவது தமிழ்ச் சங்கமும் செயல்பட்டனவாகக்
கூறப்படுகிறது. தென்மதுரையும், கபாடபுரமும் கடல் கொள்ளப்படவே,
வடமதுரை என்ற இன்றைய மதுரையில் முடத்திருமாறன் என்ற
பாண்டிய மன்னன் மூன்றாவது சங்கத்தை நிறுவினார் என்று
அறியப்படுகிறது.
சங்க காலத்தில் எழுந்த தமிழிலக்கிய நூல்கள் இலக்கிய
நயமும், பண்பாட்டு வளமும் கொண்டுள்ளன. தொல்காப்பியம்,
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கியங்களாகும்.
சங்க இலக்கியம் மற்றும் இதர சில சான்றுகளிலிருந்து சங்ககாலத்
தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மும்முடி மன்னர்கள்
ஆட்சி புரிந்துள்ளனர் என அறிகிறோம். இன்றைய கேரள மாநிலப்
பகுதி, தமிழ்நாட்டின் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களைக்
கொண்டிருந்த ‘கொங்குநாடு’ ஆகியவை சேரநாட்டின்
பகுதிகளாக
கொள்ளப்படுகிறது. சேர நாட்டின் தலைநகர் ‘வஞ்சி’ என்று
கொள்வாரும், ‘இருக்கருவூர்’ என்ற ‘கரூர்’ என்று கூறுவாரும்
உண்டு. சுள்ளியம்பேரியாற்றுத்துறைமுகமும் (முசிறி), தொண்டியும்
சேரரின் பெருந்துறைமுகங்களாகும். இன்றைய தஞ்சாவூர், திருச்சி
மாவட்டங்கள், தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி
ஆகியவற்றைக்கொண்ட சோழ நாட்டை உறையூரைத்
தலைநகராகக்கொண்டு சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
காவிரிப்பூம்பட்டினம் சோழரின் புகழ்மிக்க துறைமுகமாக விளங்கியது.
சில வேளைகளில் காவேரிப்பூம்பட்டினம் சோழரின் தலைநகராயும்
இருந்து வந்துள்ளது.
|