பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்3

மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி
மாவட்டங்கள் அடங்கிய பாண்டி நாட்டை மதுரையைத்
தலைநகராகக்கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.
முத்துக்கள் ஈன்ற கொற்கை, பாண்டியரின் சிறப்புத் துறைமுகமாய்
இருந்து வந்தது. கொற்கையின் முத்தும் முசிறி தொண்டியின் கறி
(pepper) யும் பூம்புகாரின் உணவுப் பண்டங்களும் அக்காலத்தில்
உலகப் புகழ் பெற்றவையாக இருந்தன.

பண்டைய சேர மன்னர்களில் செங்குட்டுவனும், சோழ
மன்னர்களில் கரிகாலனும், பாண்டிய மன்னர்களில்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும்
தலைசிறந்த மன்னர்களாக விளங்கினர். சேரமன்னருக்கு வில்லும்,
சோழ மன்னருக்குப் புலியும், பாண்டிய மன்னருக்கு மீனும்
சின்னங்களாக இருந்தன.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்குப் பெரும்பாலும்
கட்டுப்படாமலும், சில வேளைகளில் கட்டுப்பட்டும் பல சிற்றரசர்கள்
சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி புரிந்தனர். இவர்களில் கடை
ஏழு வள்ளல்கள்
புகழ் பெற்றோர் ஆவர். பாரி, காரி, ஓரி, நள்ளி,
எழினி, ஆய், அதியமான்
ஆகியோர் அக்கடை ஏழு வள்ளல்கள்
ஆவர். குமணன் என்ற பிறிதொரு வள்ளலும் குறிப்பிடத்தக்கவர். தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியை மலையமான்களும்,
மற்றொரு பகுதியை ஓய்மான்களும் ஆட்சி புரிந்தனர். தொண்டை
நாட்டை (செங்கற்பட்டு, வடஆர்காடு மாவட்டங்களடங்கியது)
திரையர் என்பவர்கள் ஆட்சி புரிந்தனர். பழனிமலை நாட்டை
வேள் ஆய் மரபினரும், பறம்பு மலை (பிரான்மலை) நாட்டைப்
பாரியும் அவரது மரபினரும் ஆட்சி புரிந்தனர். தர்மபுரி மாவட்டப் பகுதியைக் கொண்ட தகடூர் நாட்டை அதியமான்கள் ஆட்சி புரிந்தனர். தகடூரைச் சேர்ந்த அதியமான்களே அசோகரின் கல்வெட்டுகள் குறிக்கும் சத்திய புத்திரர் என்ற கருத்து உள்ளது. இவர்களே கீழ்த்திசை நாட்டிலிருந்து முதன் முதலில் தமிழகத்துக்குக் கரும்பைக் கொண்டு வந்துள்ளனர். தோட்டிமலைப் பகுதிகளை நள்ளி மரபினர் ஆட்சி புரிந்தனர். நாஞ்சில் நாட்டை நாஞ்சில் வள்ளுவன் ஆண்டு வந்தார்.