சங்க இலக்கியங்கள்மூலம், சங்க காலத் தமிழ் மக்கள்,
இலக்கியம், சமயம், வாணிபம், நுண்கலைகள் ஆகிய பல
துறைகளிலும் மேம்பட்டு விளங்கினர் என அறியலாம்.
களப்பிரர் ஆட்சி
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தமிழகத்தில் களப்பிரர்கள்
என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இந்தக் களப்பிரர்கள் யார்
என்பது பற்றிய கருத்துகள் ஆய்வில் உள்ளன. இவர்கள் கன்னட
நாட்டார் என்றும், ‘வடவடுகர்’ என்றும் புல்லியின் வழிவந்த
‘கள்வர்’ என்றும் கருதப்படுகின்றனர். சங்க காலத் தமிழர்
காலம் களப்பிரர்கள் ஆட்சி காலத்தைப்பற்றி அறியப் போதியச்
சான்றுகள் இல்லாமையால் இவர்கள் ஆட்சிக் காலத்தைத் தமிழக
வரலாற்றின் இருண்ட காலம் என்பர். களப்பிரர்கள் ஆட்சியினால்
மதுரைத் தமிழ்ச் சங்கம் முடிவுக்கு வந்தது. சமண, பௌத்த
சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. இக்காலத்தில் சமண சமயத்தினர்
மதுரையில் திராவிடச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். சமணப்
பெரியோர்கள் தமிழ் மொழியைக் கற்றுப் பல தமிழ் நூல்களை
இயற்றினர். இக்காலத்தில் பௌத்த - சமண அறநெறி இலக்கியங்கள்
எழுந்தன. களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இந்து
சமயம் பின்னடைந்தது. பிரம்மதேயங்கள் கைப்பற்றப்பட்டன.
பல்லவ மன்னர்கள் ஆட்சி
தொண்டை மண்டலப் பகுதியில் பல்லவ வம்சத்து
மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் காஞ்சியைத்
தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் ‘திரையர்’
வழி வந்தோர் என்றும், சாதவாகன ஆளுநர் மரபினர் என்றும்
கருதப்படுகின்றனர். பல்லவ மன்னன், சிம்மவிஷ்ணு (575-600)
களப்பிரர்களைத் தோற்கடித்து காவிரி நதிவரை தமது ஆட்சியை
நிறுவினார். இதே காலத்தில் கடுங்கோன் (560-590) என்ற
பாண்டிய மன்னர் களப்பிரர்களைக் “களைக்கட்டறுத்து”
பாண்டி நாட்டைக் கைப்பற்றினார்.
|