தொழில், பொறியியல் துறைகளிலும் தமிழ்நாட்டில்
சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூர் விளங்குகிறது.
பி.எஸ்.ஜி. அறநிலையத்தாரின் தொழிற்கூடம் இங்கு புகழ்
பெற்றதாகும். தொழில் மேதை ஜி.டி. நாயுடு பல தொழில்
நிறுவனங்களை இங்குத் தோற்றுவித்தார். கி.பி. 1907இல்
தோற்றுவிக்கப்பட்ட விவசாயக் கல்லூரி வளர்ச்சியடைந்து
1971ஆம் வருடம் விவசாயப் பல்கலைக் கழகம் ஆயிற்று.
தமிழ்நாட்டிற்கான விவசாயப் பல்கலைக் கழகம் இதுவே ஆகும்.
கி.பி. 1912இல் தோற்றுவிக்கப்பட்ட வனக்கல்லூரி இங்குள்ள
மற்றொரு முக்கியக் கல்வி நிறுவனம் ஆகும்.
கோயம்புத்தூர் நகரின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களில்
முக்கியமான ஒருவர் C.S. இரத்தின சபாபதி முதலியார்
ஆவார். இவர் கோயம்புத்தூர் நகராட்சியின் தலைவராகக்
கி.பி. 1912முதல் 1936வரை 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவரது பதவிக் காலத்தில் சிறுவாணி நீர் கோயம்புத்தூர் நகர
மக்களுக்குக் குடி நீராகக் கிடைத்தது (1931). மின் விளக்கு வசதி
ஏற்பட்டது (1933). கோவை நகராட்சி மன்றத்திற்குப் புதிய
கட்டடம் எழுந்தது (1926 - 1931).
1-12-1978 முதல் கோயம்புத்தூர் நகரை அடுத்துள்ள
சிங்காநல்லூர் நகராட்சி, தெலுங்குப் பாளையம்,
சங்கனூர்,
கணபதி, குமாரப் பாளையம் பேரூராட்சிகள், விளாங்குறிச்சி
பேரூராட்சியின் ஒரு பகுதி, கோவை
( Rural) கிராம ஊராட்சி
ஆகியவை கோயம்புத்தூர் நகருடன் இணைக்கப்பட்டுக்
கோயம்புத்தூர் பெருநகரம் உருவாக்கப்பட்டது. 1-5-1981
முதல்
கோயம்புத்தூர் நகரம் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது.
இது தமிழ்நாட்டின் மூன்றாவது மாநகராட்சி ஆகும். (சென்னை,
மதுரை மற்ற இரண்டு மாநகராட்சிகள்.)
1866ஆம் ஆண்டு 24,241 பேரைக் கொண்டிருந்த
கோயம்புத்தூர் நகரின் மக்கள் தொகை, 1981இல் 6,99,173
ஆக உயர்ந்துள்ளது.
|