ஒய்சள மன்னர் பேரூர் பகுதியை ஆட்சி புரிந்தார் என்று
அறிகிறோம். ஒய்சளர்களின் ஆட்சியை அடுத்து, மைசூரின்
கன்னடியர்கள் ஆட்சியிலும், பின் விஜயநகர அரசின் ஆட்சியின்
கீழும் இப்பகுதி வந்தது.
கி.பி 16ஆம் நூற்றாண்டில் இன்றைய கோயம்புத்தூர்ப்
பகுதி மதுரை நாயக்க அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்களான ஹைதர்
அலி, திப்புசுல்தான் ஆகியோரின் ஆட்சியில் பேரூரும்,
இப் பேரூர் நாட்டிற்கு உட்பட்டிருந்த கோயம்புத்தூரும் வந்தன.
நான்காம் மைசூர்ப் போரில் (கி.பி. 1799) திப்பு சுல்தான் இறந்த
பின், கோயம்புத்தூர்ப் பகுதி ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியார் ஆட்சியின்கீழ் வந்தது. கி.பி. 1805இல்
கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்
ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் நகரம் பெரிதும் முன்னேற்றம்
அடைந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைமையிடமாகக்
கோயம்புத்தூர் நகரம் திகழ்ந்தது.
கி.பி. 1866ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நகராட்சி ஆயிற்று.
இதன் முதல் தலைவர் மக்ரிக்கர் ஆவார். கி.பி. 1888இல்
கோயம்புத்தூர் நகரில் ஸ்டேன்ஸ் பருத்தி ஆலை
தோற்றுவிக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு வரை மூன்று பருத்தி
ஆலைகள் இந்நகரில் எழுந்தன. இந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில்
பருத்தி மிகுதியாகப் பயிரிடப்படுவதாலும், கடல் மட்டத்திற்கு மேல்
சுமார் 435 மீட்டர் உயரமுள்ள இடத்தில் இந்நகர்
அமைந்திருப்பதால் கிடைக்கும் தட்பவெட்ப நிலை நூல் நூற்பிற்கு
ஏற்றதாக இருப்பதாலும், பைகாரா மின் நிலையத்திலிருந்து
மின்சக்தி கிடைப்பதாலும் இந்நகரில் இந்நூற்றாண்டில் பல
பருத்தி ஆலைகள் தோன்றின. தற்பொழுது கோயம்புத்தூர் நகரில்
69 பருத்தி ஆலைகள் உள்ளதாகத் தெரிய வருகிறது.
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர் பருத்தி நெசவிற்குப் பெயர்
பெற்று விளங்குவதுபோல் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர்
உள்ளதால், கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’
எனப்படுகிறது.
|