பட்டீஸ்வர சுவாமி கோவில்
பேரூரிலுள்ள பட்டீஸ்வர சுவாமி கோவில் ஒரு தொன்மையான
சிவ வழிபாட்டுத் தலம் ஆகும். இதனை ‘மேலச் சிதம்பரம்’
என அழைப்பர். சைவ சமயாச்சாரியார்கள் நால்வரில் அப்பரும்
சுந்தரரும் இக்கோவிலுக்கு வருகைதந்து இக்கோவிலைப்பற்றித்
தேவாரத்தில் பாடியுள்ளனர். அருணகிரி நாதரின் திருப்புகழில்
இக்கோவில்பற்றிய பாடல் உள்ளது. கச்சியப்ப முனிவர் தம்
பேரூர்ப் புராணத்தில் இக்கோவிலைப் பற்றிப் பாடியுள்ளார்.
[இப்புராணம் 2,220 பாடல்களைக் கொண்டது.]
மன்னர்களின் திருப்பணிகள்
பட்டீஸ்வர சுவாமி கோவிலின் கருவறை பழம்பெருமை
வாய்ந்ததாகும். கருவறையின் வெளிச்சுவர்களில் காணப்படும்
கல்வெட்டுகள் இக்கோவிலைப்பற்றிய பல முக்கிய செய்திகளைத்
தெரிவிக்கின்றன. கொங்குச் சோழர் ஓய்சளர் காலக் கல்வெட்டுகள்
இங்கு அதிகம் உள்ளன. கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 13
ஆம் நூற்றாண்டு வரை பேரூர்ப் பகுதியை ஆட்சி புரிந்த
கொங்குச் சோழர்கள் இக்கோவிலின் அர்த்த மண்டபத்தையும்,
மகா மண்டபத்தையும் எழுப்பினர். இக்கோவிலின் திருப்பணியில்
முக்கியப் பங்கெடுத்த கொங்குச் சோழ மன்னர் இராஜேந்திர
தேவன் ஆவார். வீர இராஜேந்திரன் (1207-1255) காலத்துக்
கதவு, தூண்கள் ஆகியவை இக்கோவிலில் உள்ளன.
சுந்தரபாண்டியன் காலத்தில் கோவிலின் மதில் கட்டப்பட்டது.
மதுரை நாயக்க மன்னர் திருமலையின் மைத்துனரான
அளகாத்திரி என்பவரால் கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
இக்கோவிலின் கனக சபை கட்டப்பட்டது. கனக சபைக்கு
முன்புறமுள்ள புது மண்டபம் நாட்டுக்கோட்டை நகரத்தாரான
சோமசுந்தரம் என்பவரின் திருப்பணி ஆகும். கோவிலின்
திருமண மண்டபம் மத்திபாளையம் தீனம் பாளையத்தார்கள்
கட்டுவித்ததாகும். கோவிலின் எதிரிலுள்ள தெப்பக்குளம்,
தெற்கணாம்பி அரசர்கள் வழிவந்த மாதையன் என்பவரால்
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.
|