பக்கம் எண் :

232தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சிவபெருமானைக் கண்டு மணந்தார் என்றும், பின் சிவபெருமான்
மதுரையை ஆட்சி புரிந்தார் என்றும் புராண வாயிலாக
அறியப்படுகிறது. சங்க காலத்தில் மதுரைக்கு அருகில் குலசேகரன்
என்ற பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்த காலத்தில், தனஞ்சயன்
என்ற வணிகன், கடம்பவனம் நிறைந்த வனப் பகுதியில் ஒரு
கடம்பமரத்தினடியில் இந்திரன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றைக
கண்டதாகவும், பாண்டிய மன்னனும் அந்த லிங்கத்தின் பெருமை
கண்டு, கடம்பவனத்தை அகற்றித் தான் கண்ட சொக்கலிங்கத்திற்கு
ஒரு கோவில் எழுப்பினான் என்பதும் புராணச் செய்தியாகும்.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய ‘திருவிளையாடல் புராணம்’
மதுரைக்குரிய முக்கியத் தல புராணமாகும்.

பார்வதிதேவி ‘மீனாட்சி’ என்ற திருவுருவத்திலும்
சொக்கநாதர் அல்லது சுந்தரேசுவரர் லிங்க வடிவிலும்
இக்கோவிலின் கருவறைகளில் காட்சி தருகின்றனர். சுமார்
1000 ஆண்டுகளுக்கு மேல் மதுரையைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள், மதுரையைத் தலைநகராகக்
கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர்கள்,
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், இதர பல தனிப்பட்ட
பெரியார்கள் ஆகியோரின் திருப்பணிகளால் மீனாட்சி கோவில்
இன்றைய உருவைப் பெற்றுள்ளது. காலத்தால் சுவாமியின் கோவில்
அம்மன் கோவிலைவிட முந்தியதாகத் தெரிகிறது. திருமலை
மன்னர் காலத்தில் (1623 - 1659) மீனாட்சி அம்மன் சந்நிதி
முக்கியத்துவம் பெற்றது. சித்திரைத் திருவிழா சிறப்பெய்தியது.

மீனாட்சியம்மன் கோவிலின் கலைச்சிறப்பு

1. சுந்தரேசுவரர் சந்நிதியில் கருவறைமீது உள்ள
‘இந்திர விமானம்’ மிக்க புகழ் வாய்ந்தது. இதில் காணப்படும்
எட்டுக்கல் யானைகளின் உருவங்கள், கொடுங்கைகள்
ஆகியவை சிற்பக்கலைச் சிறப்புமிக்கவை. இந்த
விமானத்தைப்போல் தமிழகத்தில் எங்கும் இல்லை. சுவாமியின்
கருவறை பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின் நாயக்க
மன்னர் விஸ்வநாதர் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டது.