28. சிவகங்கை
சிவகங்கை என்ற நகர் இராமநாதபுர மாவட்டத்தில்
உள்ளது. இராமநாதபுரத்தின் ஆட்சியின்கீழ் இருந்த சிவகங்கைப்
பகுதியில் விஜயரகுநாத சேதுபதி ஆட்சிக் காலத்தில் (1710-1720)
அவரது ஆதரவினால் சிவகங்கை என்ற புதிய சமஸ்தானம்
ஒன்று அமைக்கப்பட்டது.
விஜயரகுநாத சேதுபதியின் மகளை மணந்திருந்த
சசிவர்ணத்
தேவர் இதன் முதல் ஆட்சியாளர் ஆனார். இவருக்குப்பின்
முத்து வடுக நாதர் (1750-1780) சுமார் 30 ஆண்டுகள்
சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்தார். தென்னாட்டில்
தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பிய கர்நாடக நவாப்
முகமதலியின் படைகளுக்கும் முத்துவடுகநாதருக்கும் காளையார்
கோவில் பகுதியில் ஏற்பட்ட போரில் (1780) முத்துவடுகநாதர்
இறந்தார். முத்துவடுகநாதரிடம் வெள்ளை மருது (1748-1801),
சின்ன மருது (1753-1801) என்று இரு சகோதரர்கள்
பணியாற்றினர். இவர்கள் உடையார் சேர்வை என்பவரின்
வீரப் புதல்வர்கள் ஆவர். சிறுவயல் என்ற கிராமத்தைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் முத்து வடுகநாதரின் மனைவியான
வேலு நாச்சியாருடன் திண்டுக்கல் சென்று, மைசூர் மன்னர்
ஹைதர் அலியின் உதவி பெற்று, கர்நாடக நவாபின்
பிடியிலிருந்து சிவகங்கையை விடுவித்தனர். வேலு
நாச்சியாரை சிவகங்கையின் ஆட்சியாளராக்கினர். இவ்விரு
சகோதரர்களும் வேலு நாச்சியாரின் அமைச்சர்களாயினர். மூத்தவர்
சிறந்த வீரராகவும் இளையவர் சிறந்த ஆட்சியாளராகவும்
விளங்கினார். கி.பி. 1783இல் ஏற்பட்ட கர்னல் புல்லர்டன்
தாக்குதலிலிருந்தும் கி.பி. 1789இல் கர்னல் ஸ்டூவர்ட்
தாக்குதலிலிருந்தும் சிவகங்கைச் சீமையைக் காத்த பெருமை
மருது சகோதரர்களையே சாரும்.
|