பக்கம் எண் :

304தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கி.பி. 1790இல் வேலு நாச்சியார் காலமான பின்
அவரது மகள் வெள்ளச்சி சிவகங்கைச் சீமையின் ஆட்சி
உரிமையைப் பெற்றார். வெள்ளச்சியின் மரணத்திற்குப்பின்
(1793) சிவகங்கையின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும்
மருது சகோதரர்களே பெற்றனர். பெரிய மருதுவே
சிவகங்கையின் ஆட்சியாளர் என்று கருதப்பட்டாலும் சின்ன
மருதுவே சிவகங்கையின் உண்மையான ஆட்சியாளராக
விளங்கினார். இவர் சிறுவயலைத் தமது தலைமையிடமாகக்கொண்டு
ஆட்சி புரிந்தர்.

ஆங்கிலேயரிடம் ஏராளமாகக் கடன்பட்ட நவாப் முகம்மதலி,
தமது கடன் தொகையைத் திருப்பித் தரும்வரை, தென்னாட்டில்
வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார்.
ஆனால், அந்நியரான ஆங்கிலேயர்கள் தங்கள் தாயகத்தில்
வரி வசூலிப்பதை மருது சகோதரர்கள் எதிர்த்தனர். இவர்களது
சுதந்தர உணர்ச்சியால் சிவகங்கையில் விடுதலைக் கொடி பறந்தது.
பிரான் மலையும், காளையார் கோவிலும் இவர்களது இராணுவக்
கோட்டைகளாக விளங்கின. தங்களை எதிர்த்த கட்டபொம்மனை
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தூக்கிலிட்டுக் கொன்றனர்
(1799). கட்டபொம்மன் இறந்தபின் அவர் சகோதரர் ஊமைத்துரை
மருது சகோதரர்களுடன் சேர்ந்தார். மருது சசோதரர்கள்,
பாஞ்சாலக்குறிச்சியின் ஊமைத்துரை, விருப்பாச்சி பாளையக்காரர்
கோபால நாயக்கர், இதர சில பாளையக்காரர்கள் ஆகியோர்
கி.பி. 1800-1801இல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர்.
இப்போராட்டத்தின் பொழுது சிவகங்கைப் பகுதியில் நடந்த
சிறுவயல் போரும், காளையார் கோவில் போரும் குறிப்பிடத்
தக்கவையாகும். 1801 ஜூனில் திருச்சியில் வெளியிடப்பட்ட
மருது பாண்டியரின் சுதந்தரப் பிரகடனம் தமிழ் மக்களை
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி
கூறியது.

1801 மே 28முதல், 1801 அக்டோபர் 27வரை இந்த
இராணுவப் போராட்டம் கடுமையாக இருந்தது. சிவகங்கையின்