பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்305

துறைமுகமான தொண்டிக்கு மருது சகோதரர்களால்
அனுப்பப்பட்ட தோணிகள் பாக் நீரிணைப்பு வழியாக அரிசியைக்
கொண்டு செல்லும் தோணிகளைத் தாக்கி அந்த அரிசியைக்
கைப்பற்றிச் சிவகங்கைக்குக் கொண்டு சென்றன. மருது
சகோதரர்களின் இச்செயலைக் கண்ட ஆங்கில மாவட்ட ஆட்சித்
தலைவர் லூசிங்டன் சிவகங்கைத் தோணிகளைத் தாக்குவதற்கு
உத்தரவிட்டார். இறுதியில் சிவகங்கையின் தோணிகள் சில,
ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டன. சில தோணிகள்
எரிக்கப்பட்டன. தொண்டிப் பகுதியில் நடந்த இந்த
‘சிறு கடற்போர்’ சிவகங்கையை ஆட்சி புரிந்த மருது
சகோதரர்கள், ஆங்கிலேயரை எவ்வாறு துணிச்சலுடன்
எதிர்த்துப் போரிட்டனர் என்பதைக் காட்டுகிறது.

ஆங்கிலத் தளபதி அக்னூவின் தலைமையில் படைகள்
மருது சகோதரர்களின் தலைநகராக விளங்கிய சிறுவயலை
1801, ஜூலை இறுதியில் தாக்கிப் பிடித்தன. பின்
ஆங்கிலப்படை காடுகளைக் கடந்து காளையார் கோவில்
செல்ல முற்பட்டது. ஆனால், அடர்ந்த காடுகளைக் கடந்து
செல்ல ஒரு வழியும் இல்லாததால், ஆகஸ்ட் (1801) முழுவதும்
முயன்றும் அப்படை காளையார் கோவிலை அடைய முடியவில்லை
என்று தளபதி வெல்ஷ் கூறிய குறிப்பிலிருந்து அறியப்படுகிறது.
செப்டம்பரில் (1801) காடுகளை அழித்து ஆங்கிலப் படைகள்
காளையார் கோவிலை அடைந்தன. அக்டோபர் 1, (1801)இல்
காளையார் கோவில் வீழ்ந்தது. மருது சகோதரர்கள் சிறைப்
பிடிக்கப்பட்டனர். 1801, அக்டோபர் 27இல் இந்த வீர
சகோதரர்கள், திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால்
தூக்கிலிடப்பட்டனர்.

அந்நியரை எதிர்த்து அஞ்சா நெஞ்சத்துடன் விடுதலைப்
போர் புரிந்த மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த சிவகங்கைச்
சீமையின் வரலாறு நமக்குப் பெருமையளிக்கிறது.

மருது சகோதரர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார், சிவகங்கையை ஆட்சி புரிய
கவுரிவல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாராக
நியமித்தனர் (1801).