பக்கம் எண் :

306தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சிவகங்கையின் வரலாற்றில் எழுந்துள்ள பண்பாட்டுச்
சின்னங்களாகச்
சிவகங்கை மன்னர்களின் அரண்மனைப்
பகுதிகள் சில உள்ளன. கல்யாண மண்டபம் எனப்படும் கட்டடம்,
அதன் முன்னுள்ள ஒரு மாடிக் கட்டடம், அந்தப்புர நீச்சல்
குளம், இராஜராஜேஸ்வரி கோவில் ஆகியவை அரண்மனையின்
எஞ்சிய பகுதிகளாக உள்ளன. கல்யாண மண்டபத்தின் தூண்கள்,
திருமலை மன்னரின் மதுரை அரண்மனைத் தூண்கள்போல்
உள்ளன. இக்கட்டடத்தின் பின்பகுதியில் மன்னர்
வீற்றிருப்பதற்கான மண்டபத்தில், ஒரே கல்லாலான அழகிய
ஆசனங்கள் உள்ளன. அந்தப்புரம் அருகிலுள்ள நீச்சல்குளம்
இன்றும் பயன்படும் நிலையில் உள்ளது. அரண்மனையின்
எஞ்சிய பகுதிகளில் இராஜ ராஜேஸ்வரி கோவில் முற்றிலும்
நல்ல நிலையில் உள்ளது. சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த
கவுரி வல்லபத் திருமரபினரின்
குலதெய்வமாக இக்கோவில்
விளங்கிற்று. சிவகங்கைச் சீமையை நிறுவிய கவுரி வல்லப
சசிவர்ண ராஜாவால் கி.பி. 1730இல் இக்கோவில் கட்டப்பட்டது.
அவர் மறைவிற்குப்பின் அவர் வழிவந்த 16 மன்னர்களும்,
ராணியரும் இக்கோவிலின் தாசர்களாக இருந்தனர். கடைசி
தாசரும் கவுரிவல்லபருமாக இருந்தவர் கார்த்திகேய
வேங்கடாஜலபதி ராஜா
ஆவார்.

அந்தப்புரத்தின் இருமாடிக் கட்டடம், மற்றும்
அரண்மனையின் முக்கிய பகுதிகள் யாவும் அழிந்துவிட்டன.
விலையுயர்ந்த மர உத்திரங்களுக்காகவும், மரஜன்னல்,
கதவுகளுக்காகவும் இவ்வரண்மனை இடிக்கப்பட்டதாகத்
தெரிகிறது. அரண்மனை அழிக்கப்படாமல்
பாதுகாக்கப்பட்டிருந்தால், சிவகங்கையின் பெருமைமிக்க வரலாற்றை
என்றும் நினைவு கொள்ள இது ஒரு நல்ல சின்னமாக
இருந்திருக்கும். சிவகங்கை தேவஸ்தானத்தின்
நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களுக்கு அறங்காவலராகத்
தற்பொழுது விளங்குபவர் சிவகங்கை ராணி அபராஜித
பங்கஜவல்லி நாச்சியார் ஆவார்.