(இப்புத்தகத்தின் மற்றொரு பகுதியில் சென்னை நகர் தலைப்பில்
கிண்டி காமராஜர் நினைவு ஆலயம் என்ற சிறு தலைப்பில்
காமராஜரைப்பற்றிய இதர சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.)
விருதுநகரில் காமராசர் வாழ்ந்த இல்லம், அவர் காலமானபின்
தமிழக அரசால் பெறப்பட்டது. இது 1978 முதல் ‘காமராசரின்
நினைவு இல்லமாகத்’ தமிழக அரசால் கண்காணிக்கப்பட்டு
வருகிறது. நகரின் மையத்திலுள்ள தெப்பக்குளத்தின் மேல்
பகுதியில் (45, சுலோசன நாடார் தெருவில்) இந்த இல்லம்
உள்ளது. ‘கர்மவீரரின்’ வாழ்க்கை வரலாற்றில் வரும் பல காட்சிகள்
அழகிய நிழற்படங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காமராசர் பயன்படுத்திய உடை, அவர் படித்த சில நூல்கள்
ஆகியவையும் இந்த நினைவு இல்லத்தில் இடம் பெறுகின்றன.
விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்குரிய
ஸ்ரீபராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில், இந்நகரின் மத்தியில் உள்ளது.
இக்கோவில் அம்மனின் சந்நிதி முன்னுள்ள கற்றூண்கள்,
கோபுரத்தின் அடிப்பகுதி ஆகியவை சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
தற்காலச் சிற்பிகளின் கலைத் திறமையைக் காட்டும் ஒரு சின்னமாக இக்கோ வில் விளங்குகிறது. இக்கோவிலருகில் ‘கச்சை கட்டி, திருவண்ணாமலை நாடார் தோற்றுவித்த’ ஸ்ரீவாலசுப்ரமணியசுவாமி
கோவில், ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில், ஸ்ரீசிவன் கோவில்
ஆகிய கோவில்களும், இருப்புப்பாதை நிலையம் அருகில்
ஸ்ரீரெங்கநாத சுவாமி கோவிலும் உள்ளன. இவை யாவும்
விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்குரியனவாகும்.
நகரின் மத்தியிலுள்ள “நாடார்கள் தெப்பக்குளம்” நாடார்
சமூகத்தினரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
வருடத்தில் ஓரிரு விசேட நாள்களைத் தவிர மற்ற நாள்களில்
இத்தெப்பக்குளத்தில் பொதுமக்கள் நீராட அனுமதிக்கப்படாமல்
இது காக்கப்படுகிறது. தெப்பக்குளத்திற்கு மேற்கில் சிறிது
தொலைவில் சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்கு
உட்பட்டதாகும். இக்கோவிலுக்குச் சுமார் 460 ஆண்டுகளுக்குமுன்
பாண்டிய மன்னர் ஒருவர் கொடையளித்ததாகக் கூறப்படுகிறது.
|