தூண்களின் அடிப்பகுதியில் சைவசமயக் கருத்துகளை விளக்கும்
சிறிய புடைப்புச் சிற்பங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.
அம்மன் சந்நிதி முன்னுள்ள ஆறுகால் மண்டபத் தூண்களும்
சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
வரதராஜப் பெருமாள் சந்நிதி தற்காலச் சிற்பிகளின்
சிற்பக் கலைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சந்நிதியின் தென்புறச் சுவரில் ஸ்ரீரெங்கநாதர் அரவணைமீது
சயனம் கொண்டுள்ள காட்சி புடைப்புச் சிற்பமாக விளங்குகிறது.
இதனருகில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும்
பத்துப் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சந்நிதியின் மற்ற பக்கச்
சுவர்களில் மகா விஷ்ணு, நரசிம்ம மூர்த்தி, இராமர்
பட்டாபிஷேகம், வேணுகோபாலன் ஆகிய பெயர்களைக்
கொண்ட சிறு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள
வரதராஜப் பெருமாள் சந்நிதி தற்காலச் சிற்ப அதிசயங்களில்
ஒன்று எனலாம்.
கோவிலின் மேல்புறம் பழனியாண்டவர் சந்நிதியும்,
வட புறம் வாழவந்த அம்மன் சந்நிதியும் உள்ளன.
பெரிய கற்றூண்களை நிறுவி இக்கோவிலை விரிவுபடுத்திக்
கட்டும் திருப்பணி வேலை நடைபெற்று வருகிறது. முற்றிலும்
கருங்கல்லாலான அமுதலிங்கேஸ்வரர் கோவில் தமிழ் மக்கள்
பண்பாட்டின் பெருமைக்குரிய சின்னங்களில் ஒன்றாகும்.
விருதுநகர்
அருப்புக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. தொலைவில்
விருதுநகர் உள்ளது. இராமநாதபுர மாவட்டத்தில் முக்கிய
நகராகவும், தமிழ்நாட்டின் முக்கிய வணிகத்தலமாகவும்
விருதுநகர் விளங்குகிறது. இந்நகர் தமிழகத்தின்
முதலமைச்சராகப் பணியாற்றிய ‘கர்மவீரர்’ காமராஜர் (1903-1975)
பிறந்த இடம் ஆகும். உயர்கல்வி இல்லாவிட்டாலும், முறையான
மக்கள் சேவைமூலமாக ஒருவர் உயரிய நிலையை அடையலாம்
என்பதற்கு காமராஜர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகிறார்.
|