பக்கம் எண் :

316தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பெறப்பட்டுள்ளன. இவை சென்னை எழும்பூர் அரசினர்
காட்சிக்கூடத்தில் உள்ளன. சிவகாசிக் செப்பேடுகள் பாண்டியர்
வரலாற்றை அறிய முக்கிய ஆதாரமாக உள்ளன.

சிவகாசி ஓறகண்டி கனகய்யாநாயுடு (1897-1972)
தொல்பொருள்கள் சேகரிப்பதில் சிறந்து விளங்கினார். இவர்
நகரின் மத்தியிலுள்ள தமது இல்லத்தில் ‘சரஸ்வதி மஹால்’
என்ற வரலாற்றுக் காட்சிக்கூடத்தை நிறுவிப் புகழ் பெற்றார்.
அவர் காலமானபின் அவரது காட்சிக்கூடம் தனது
முக்கியத்துவத்தை இழந்தது.

திருத்தங்கல்

சிவகாசியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருத்தங்கல் என்ற
ஊர் உள்ளது. இங்குள்ள குன்றின்மீது தொன்மைமிக்க ஒரு
வைணவ ஆலயம் உள்ளது. இக்கோவிலில் நின்ற நாராயணப்
பெருமாளும் செங்கமலத் தாயாரும்
வழிபடப்படுகின்றனர்.
இவ்வாலயத்தின் சில பகுதிகள் மதுரையில் ஆட்சிபுரிந்த
சுந்தரபாண்டியனின் அமைச்சர் குரு குளத்தராயன்
என்பவரால் கி.பி.1227இல் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

செங்கமலத் தாயார் சந்நிதிக்கு அருகில் ஸ்ரீரெங்கநாத
சுவாமி ஆலயம்
உள்ளது. இது ஒரு குகைக் கோவில்
ஆகும். திருத்தங்கல் மலையின் ஒரு பகுதியைக் குடைந்து
அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோவிலில் விஷ்ணுவின்
சயனக் காட்சி அழகுடன் காணப்படுகிறது.

வைணவ ஆலயத்திற்குக் கிழக்கில் மலையின் ஒரு
பகுதியில் சிவாலயம் உள்ளது. இறைவன் கருநெல்லிநாத சுவாமி
என்றும், இறைவி மீனாட்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இம்மலையிலுள்ள வைணவ ஆலயத்தில் திருப்பணிகள் புரிந்த
சுந்தர பாண்டியனின் அமைச்சர் குரு குளத்தராயன்,
இச்சிவாலயத்தின் கட்டடப் பகுதிகளைக் கி.பி. 1233இல்
எழுப்பியதாகத் தெரிகிறது. குன்றின் உச்சியில் முருகன்
ஆலயம் உள்ளது.