குருமலைத் துரையும் வாரிசு இன்றி இறந்தபின்
ஜெகவீர குமார எட்டப்பர் அய்யன் (1783-1816)
எட்டையாபுர மன்னரானார். ஆங்கிலேயரின் நண்பராக விளங்கிய
இந்த எட்டையாபுர மன்னர் பாஞ்சாலங்குறிச்சிப் போரில்
கட்டபொம்மனுக்கு ஆதரவளிக்கவில்லை. வெங்கடேஸ்வர
எட்டப்பர் அய்யன் காலத்தில் (1816-1839) எட்டையாபுர
அரண்மனையில் புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டன. இவர்
காலத்தில் இசைமேதை முத்துச்சாமி தீட்சிதர் சில ஆண்டுகள்
எட்டையாபுரத்தில் தங்கி வாழ்ந்தார். இம்மேதை கி.பி. 1835இல்
எட்டையாபுரத்தில் இயற்கை எய்தினார்.
ஜெகவீரராம குமார எட்டப்பர் அய்யன் (1839-1852)
சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். இவர் காலத்தில்
மண்ணால் கட்டப்பட்டிருந்த எட்டையாபுரக் கோட்டை,
இடிக்கப்பட்டுப் பலமிக்க கோட்டையாகக் கட்டப்பட்டது.
அரண்மனையில் ‘தர்பார் மண்டபம்’ கட்டப்பட்டது (1843).
கழுகுமலை முருகன் கோவிலில் இவர் சிறந்த திருப்பணியை
மேற்கொண்டார். ஜெகவீரராம குமார வெங்கடேஸ்வர
எட்டப்பர் அய்யன் (1852-1858) காலத்தில் எட்டையாபுர
அரண்மனையில் அழகிய முடிசூட்டு மண்டபம் கட்டப்பட்டது.
இவர் ஓர் இசை மேதையாகவும் விளங்கினார். இவருக்குப்பின்
பதவிக்கு வந்த முத்துச்சாமி பாண்டியன் (1858-1868) இசைக்
கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். கழுகுமலைக்
கோவிலுக்குப் பல தானங்களை வழங்கினார்.
‘பிதா மகாராஜா’ என்றழைக்கப்பட்ட
ஜெகவீரராம குமார
எட்டப்பர் (1868-1890) காலத்தில் எட்டையாபுரத்தில் நல்ல
சாலைகள் அமைக்கப்பட்டன. அரண்மனையில் அழகிய
கட்டடங்கள் எழுந்தன. ‘பிதா மகாராஜாவின்’ புதல்வர் உரிய
வயதினை அடையாததால், இவர் இறந்தபின் எட்டடையாபுரத்தின்
ஆட்சிப் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் ஏற்றுக் கொண்டது
(1890-1899). உரிய வயதை அடைந்த ‘இராஜா மகாராஜா’
கி.பி. 1899முதல் 1915வரை ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சிக்
காலத்தில் எட்டையாபுரம், பொருளாதாரத் துறையிலும்,
|