பக்கம் எண் :

356தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பார்ச்சுக்கீசியர் காலத்திலும், டச்சுக்காரர்கள் காலத்திலும்
தூத்துக்குடியின் முக்கிய வாணிபம் இலங்கையுடன் நடை பெற்றது.
பிரெஞ்சு கிறித்தவ சபையைச் சேர்ந்த தந்தை மார்டின்,
கி.பி. 1700இல் தூத்துக்குடி 50,000 மக்களுக்குமேல் உள்ள
செழிப்புமிக்க ஒரு நகரமாகத் திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

டச்சுக்காரர்கள் கி.பி. 1750இல் தூத்துக்குடியில் புனித
திரித்துவ ஆலயத்தை
(Holy Trinity Church) எழுப்பினர்.

டச்சுக்காரர்களின் வாணிபத்திற்குப் போட்டியாக ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனி எழுந்தது. இதன் விளைவாக கி.பி. 1782இல்
டச்சுக்காரர்களிடமிருந்து தூத்துக்குடியை ஆங்கிலேயர்கள்
பெற்றனர். ஆனால், டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரிடமிருந்து
தூத்துக்குடியை மீட்டு, 1785முதல் 1795 வரையிலும், பின் 1818முதல்
1825 வரையிலும், தங்களிடம் வைத்திருந்தனர். டச்சுக்காரர்களின்
வீழ்ச்சியையடுத்து தூத்துக்குடி ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வந்தது.
1801இல் தென்னிந்தியக் கலகத்தின்போது பாஞ்சாலங்குறிச்சியின்
பாளையக்காரரான ஊமைத்துரை, தூத்துக்குடியை
ஆங்கிலேயரிடமிருந்து வென்று சிறிதுகாலம் வைத்திருந்தார்.
தூத்துக்குடிக் கோட்டை 1810இல் ஆங்கிலேயரால்
அழிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி பெரிதும்
வளர்ச்சியடைந்தது. கி.பி. 1876இல் புகைவண்டிப் போக்குவரவு
தூத்துக்குடிக்கு ஏற்பட்டது. கி.பி. 1880இல் தோற்றுவிக்கப்பட்ட
ஹார்வி ஆலை இந்நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
கி.பி. 1881இல் தூத்துக்குடித் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டது.
நகரில் பல பெரிய வங்கிகள் தோன்றின. கி.பி. 1866இல் இந்நகரில்
நகராட்சி முறை ஏற்பட்டது.

தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய மேலை நாட்டு
அறிஞர்களில் ஒருவரான கால்டுவெல் (1815-1891) கி.பி. 1884
முதல் 1890வரை இந்நகரில் கிறித்தவ சமயத்திற்குத்
தொண்டாற்றினார்.